Wednesday, September 3, 2008

தமிழ்

முன் வாழ்ந்த நம் தமிழ் கூறிய முன்னவர்க்கு,

தன்னடக்கம் அதிகம் போலும்?!

அறுசுவையென அமர்க்களமாய்ப் பட்டியலிட்டவர்கள்

தீந்தமிழின் இனிய சுவையை விட்டுவிட்டார்கள்!

புலனுணர்ச்சியால் அறியப்படும் சிற்றின்பச் சுவையோடு

பேரின்பச் சுவையாகிய அமுதத் தமிழைச்

சேர்க்க மனமில்லையோ?

கடவுள்...

கல் என்று தெரிந்தே படைக்கும் மனிதன்
கண் முன் வரும் வறியோர்க்கு படைப்பதில்லை.
இவன் மனமன்றோ கல்!

ஒரு Trekking பயணத்தில்....

தித்திக்கும் காலைப் பொழுது
எத்திக்கும் பனிப் போர்வை
நுனிப் புல்லின் தூயத் துளி

தேகம் வருடும் மென்தென்றல்
சிலிர்க்க வைக்கும் குளிர்
இயந்திரத் தனமில்லா
இயற்கையின் சத்தங்கள்.
சத்தம் எனினும் இன்னிசை
எனின் மிக்கத் தகும்.
இந்த இனிய சுகந்தம்
நாளும் அனுபவிக்க...
ஆதவனோடு போட்டி போட்டு எழ
உறுதிமொழி பல எடுத்தும்
அலாரம் அடித்தும் போர்வையில் புதையும்
சோம்பேறித் தனமே இறுதியில் வெல்கிறது.
என் செய்வேன்? :(

பொறுப்பு

ஆறு சக்கரங்கள் அறுபது பேரை
அடைத்து அருகில் செல்ல
நான்கு சக்கரங்களுள் குளிரின்
அணைப்பிலுள்ள ஒருவர் பேசுகிறார்
அலைபேசியில் யாருடனோ
ஓசோன் ஓட்டை பற்றியும்
கரியமிழ வாயு பற்றியும்!

கடிதம்

எனக்கான உந்தன் கடிதத்தை
சட்டைப் பையில் வைத்து
பத்திரமாய் எடுத்து வந்தேன் என் அறைக்கு....
வழி நெடுக தேனீக்கள் மொய்த்தவாறு என்னை!
ஏன் இருக்காது? 'இப்படிக்கு' அடுத்து
உன் இதழ்களை அல்லவா பதித்திருக்கிறாய்...