Wednesday, December 17, 2008

நான் மறப்பேனோ?

காவியங்களும் காப்பியங்களும்
போற்றிப் புகழ்ந்துரைத்த
காதலும், வீரமும், நட்பும்,
கற்பும், நாடும், மொழியும்,
ஏனைய பலவும் காலத்தின் ஓட்டத்தில்
மாறியிருக்கலாம், இலக்கணம் தவறியிருக்கலாம்।
ஆனால்...
ஆதியிலும் அந்தியிலும் வான்கடலில்
தினமும் அலங்கார ஓவியம் சமைத்திடும்
ஆதவன் போல் மாறாதிருப்பது,
சுயநலப் பேயின் நிழல் கூட அண்டாதிருப்பது,
பிரம்மனின் ஆக்கலையும் மாலின் காத்தலையும்
இப்புவிதனில் திறம்படச் செய்யும்
உனையும் எனையும் ஈன்றெடுத்தவரின் அன்பே...

உயிர் தந்த எந்தையும்
உயிர் காத்த அன்னையும்
பின் இவ்வுடல் வளர்க்க
அவ்விருவுடல் நலிந்த கதையும்
என்னுயிர் உடல் நீங்கினும்
நான் மறப்பேனோ?

Wednesday, December 10, 2008

கொக்கிகள்

விடுகதை ஒன்றைச் சொல்லிவிட்டு
விடைதரு முன்னே மாண்டுவிட்டாய்.
வீடுவாசல் துறந்து வீதி காடுகளில்
விடை தேடிப் பயணித்தேன்.

கானல் நீர் போல் தோன்றும் விடைகள்
நெருங்கிச் சென்றால் கரைந்து போகும்.
தேடுதல் என்னவோ விடைகளுக்காகத் தான்
கிடைத்ததோ மேலும் சில நூறு வினாக்கள்!

கேள்விக் கணைகள் கொக்கிகளாய் உடம்பைத் துளைக்க
சுமைதாங்கிக் கல்லில் என் பாரம் இறக்கினேன் ஓய்வுக்காக.
இதுவரை வந்தவர் யாவரும் கேள்விக் கொக்கிகளின்
இரணத்தால் இதோடு திரும்பியிருந்தனர்.

விடை தேடும் வேலையை மூட்டை கட்டலாமென்று
வந்த பாதை பார்த்தேன், ஆயிரம் காலடித்தடங்கள்.
எதிர்த்திசை நோக்கினேன், சுவடுகளில்லாமல் நீண்டிருந்தன.

விடுகதையின் விடை எங்கிருந்தோ எனை அழைக்க
பயணித்தேன் என் சுவடுகள் பதித்து.
கொக்கிகள் இப்பொழுது சுகமாய் இருந்தன!

கற்பனை வறட்சி....

சிந்தனைச் சுரங்கத்தில் ஓர் கவிதைக்கான

கருப்பொருளின் தேடலில் நான்.

நீண்டு வளைந்துச் சென்ற பாதைகள் எங்கும்

கற்பனை வறட்சியும் வறுமையுமே பிரதானமாய்.

அலைந்து களைத்து, தோல்வியுடன் வெளிவந்தேன்.


என் வீட்டு கொலுவிற்கு புடவையில் வந்த நீ

சிந்திய பார்வைகளும் சிதறிய புன்னகையும்

கொட்டிக் கொடுத்தன எனக்கு

பல நூறு கவிதைக்கான கருப்பொருளை!

நானும் ஏகலைவன் தான்

நானும் ஏகலைவன் தான்

தொலைவிலிருந்தே கவிதை புனைய

கற்றுக் கொண்டேன் உன்னிடமிருந்து.

கட்டை விரல் காணிக்கைக் கேட்காதே

மூன்று முடிச்சுகள் போடுவதில் சிரமமிருக்கும்!

உனக்காகவே துடிக்கும் என் இதயம்

வேண்டுமானால் கேள் தருகிறேன், மகிழ்வாய்.

ஓர் மாலையில்...

மண்ணோடு மழை சேர்ந்த

மகத்தான ஓர் மாலையில்

நம் கண்களின் சங்கமத்தில்

இடியும் மின்னலும் சாரலும்

அரங்கேறியது வெளியில் மட்டுமல்ல

என்னுள் என் மனதிற்குள்ளும் தான்!

ரீ-சார்ஜ்

அரசாங்கம் ஓர் உயர் மட்ட

விஞ்ஞானிகள் குழுவை அமைத்திருக்கிறதாம்...

ஆயிரம் கவலைகள் உள்ளவரையும் நொடியில்

ரீ-சார்ஜ் செய்யும் உந்தன் புன்னகை பற்றி ஆராய!

அடகுக்கடை...

பொய் எனும் நூலெடுத்து
பாசம் எனும் வலை விரித்து
தேன்சொல் எனும் வாளெடுத்து
பாவி மகள் காத்திருக்க
அடகுக்கடையில் அறிவை விட்டு
அலைபாய்ந்து வரும் வழியில்
நான் வந்து மாட்டிக்கொண்டேனே!

விளம்பர ஒப்பந்தம்


மின்னல் கொண்டு
புன்முறுவல் செய்யும்
அந்த வான் மகளை
ஏன் இது வரை
எந்த பற்பசை நிறுவனமும்
விளம்பர ஒப்பந்தம் செய்யவில்லை?