Sunday, June 28, 2009

மன்னிப்பு வேண்டி நிற்கிறேன்...

திருடுவதே குற்றமெனும் போது,
களவாடப்படுவதே தெரியாமலிருக்கும்
உன்னிடமிருந்து கவர்வது
மிகப் பெரிய குற்றமே.

மன்னிப்பு வேண்டி நிற்கிறேன்.
உன்னிடமிருந்து
உனக்கே தெரியாமல்
சில கவிதைகள்
திருடியமைக்கு.
உன் கவிதை புத்தகத்திலிருந்து அல்ல.
உன் கண்களிலிருந்து.

இதுவும் திருட்டு தான்.
சற்று தாமதமானாலும்
புரிந்து கொண்டேன்
என் பிழையை.

மன்னித்து விடு.
மன்னித்து என்னை
கள்ளன் என்றாலும் சரி
கவிஞன் என்றாலும் சரி
கணவன் என்றாலும் சரி
ஏற்றுக் கொள்கிறேன்,
மனப்பூர்வமாய்.

Thursday, June 25, 2009

குறுஞ்செய்தி வாயிலாக ஒரு கதை

SMS

10.05 PM
இன்னுமா இன்ட்டர்வ்யூ முடியல? இப்ப எங்க இருக்கிற?

10.08
கொஞ்சம் நேரம் முன்னாடி தான் முடிஞ்சது... இப்ப சாப்டுட்டு இருக்கிறேன். பஸ் ஏறினதும் உனக்கு கால் பண்றேன்

10.09
'எப்படி பண்ணின இன்ட்டர்வ்யூ? பஸ் ஏறினதுக்கு அப்புறம் சொல்லு.

10.27
இன்ட்டர்வ்யூ நல்லா பண்ணியிருக்கிறேன்...பாக்கலாம். பஸ்-ல இடம் கிடச்சிருச்சு. இங்க படம் போட்ருக்காங்க.ரொம்ப சத்தமா இருக்கு. பேசினாலும் கேக்காது. அம்மா கிட்ட சொல்லிடு. நாளைக்குக் காலைல பாக்கலாம்.

10.29
சரி சொல்லிடறேன்... என்ன படம்? டேய் அண்ணா!பக்கத்துல எதும் அழகான பொண்ணு இருக்குதா?

10.33
ஆமா... பக்கத்துலயே ஒரு அழகான பொண்ணு. முன்னாடி இன்னொரு பொண்ணு. உனக்கு இதுல எந்த பொண்ணு அண்ணியா வேணும் சொல்லு? நாளைக்கு காலைல
வரும்போது கூட்டிட்டு வந்துடறேன். ஏதோ ஒரு சரத்குமார் படம். பேர்லாம் தெரியல.

10.35
உதை வாங்காம வீடு வந்து சேரு. போனா போகுது...கொஞ்சம் சைட் வேணா அடிச்சிக்கோ :)

10.39
நீ வேற.. நான் சும்மா சொன்னேன்டி.. இங்க பஸ்ல ஒரு பொண்னு கூட இல்ல.... கிழடுகட்டைங்களா இருக்கு :( ...படமும் புடிக்கல. போர் அடிக்குது.

10.42
அப்ப நல்லா படுத்துத் தூங்கு... சொல்ல மறந்திட்டேன். பாக்யம் சித்தி இன்னைக்கு வந்திருந்தாங்க. உனக்கு ஏதொ பொண்னு பாத்து வெச்சிருக்காங்களாம். உனக்கு
வேலை கிடைச்சதும் கல்யாணம் தானாம் :)!

10.45
ஆமா.. சித்திக்கு வேற வேலை இல்ல. இப்பலாம் பண்ணிக்க முடியாது. முதல்ல உன் கல்யாணம்டி... ஒரு இரண்டு வருஷத்துக்கு அப்புறம் தான் என்னோடது எல்லாம்.

10.47
நானும் இப்பலாம் பண்ணிக்க முடியாது...சரி வேலை கிடைச்சா முதல் சம்பளத்துல எனக்கு என்ன வாங்கித் தருவ?

10.53
ஹலோ...'என்ன வாங்கித் தருவ'ன கேட்டதும் சத்தத்தையே காணும்?

10.56
டேய்...தூங்கிட்டியா? ம்ம்...நாளைக்குப் பாக்கலாம். குட் நைட்....


11.00
(மற்றொரு பேருந்திலிருந்து யாரோ ஒருவர் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்புகிறார்)

'மச்சான் இங்க ஒரு பஸ் பள்ளத்துல கவுந்து கிடக்குடா. நிறைய கூட்டம் கூடியிருக்கு. ஆனா எங்க பஸ் நிறுத்தாம வந்துட்டான். எப்படியும் அஞ்சாறு பேராவது
காலியாயிருப்பாங்கடா'

Wednesday, June 24, 2009

தீர்ப்பு

என்னைப் பற்றிய
உன் கவிதைக்கும்,
உன்னைப் பற்றிய
என் கவிதைக்கும்,
சிறந்தது யாரென்ற
போட்டி வந்தது.

நம்மிடையேயான காதலையே
நடுவராய் ஏற்றனர் இருவரும்.
காதல் நடுவரோ கவிதைகள் படிக்க
அவகாசம் வேண்டுமென்று
மழை நாள் ஒன்றுக்குத்
தீர்ப்பைத் தள்ளி வைத்தார்.

தீர்ப்பு நாளும் வந்தது.
காதல் மன்றத்தில்
வாதியும் பிரதிவாதியும்
ஆவலாய் காத்திருக்க,
கம்பீர நடை பயின்று வந்தார்
காதல் நடுவர் அவர்கள்.
புன்னகையுடன் வாசித்தார் தீர்ப்பை...
கர்வம் பொங்க.

'இரு கட்சி கவிதைகளையும்
சாட்சியாய் கொண்டு வரும்
என் தீர்ப்பு யாதெனில்:
'இந்த எழுத்து கவிகளை விட
உணர்வு கவிதையான நானே,
அதாவது வாதி பிரதிவாதி
வியந்து பாடிய காதலே
சிறந்த கவிதை என்று தீர்ப்பளிக்கிறேன்!'

காதல் மன்றம் மகிழ்ச்சியில் பொங்க,
கூடியிருந்த காதலர்கள் ஆர்ப்பரிக்க,
உன் கவிதையும்
என் கவிதையும்
தலை தொங்கி வெளியேறியது.

Tuesday, June 23, 2009

முத்தம்

முத்தம் ஒன்று இட்டு விட்டு
வந்த திக்கில் சென்றுவிட்டாய்.
இட்ட சுவை பட்ட இடம்
உறைந்து போய் உள்ளது.
மல்லி மணம் காற்றில் சுற்றி
சித்தம் ஏறி பித்தம் கொளச் செய்கிறது.
உனக்கென்ன நீ அமைதியாய் இருப்பாய்...
புயல் சின்னம் என்னை அல்லவா
மையம் கொளச் செய்து விட்டாய்.

ஒரு கதை, இரு வேறு முடிவுகள்...

ராஜதுரை எம்.எல்.ஏ. அப்பொழுது தான் இரவு உணவிற்காக வீடு வந்திருந்தார். வந்தது தெரிந்தோ என்னவோ அவரது வீட்டு தொலைபேசி அலறியது . அழைப்பை எடுக்கச் சென்ற தன் மனைவியை சைகையால் அமர்த்திவிட்டு அவரே தொலைபேசி எடுத்தார்.

'ஹலோ....'

'.....' எதிர் முனையில் பதில் இல்லை.

'ஹலோ..யார்ங்க?'

கரகர குரலில் ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவரின் குரல் ஒலித்தது. 'நீ இது வரை பண்ணின அட்டூழியங்களுக்கு எல்லாம் பதில் சொல்ற காலம் வந்தாச்சு. இன்னும் இரண்டே நாள்ல உன் கதையை முடிக்கிறேன். சவால்... முடிஞ்சா உன்ன காப்பத்திக்கோ'.

தொலைபேசி துண்டிக்கப் பட்டது. ராஜதுரை ஒரு நிமிடம் சிலையாகிப் போனார். முகத்தின் திடீர் மாற்றம் கண்டு அவரது மனைவி குழம்பிப் போனார்.

'என்னங்க ஆச்சு? யார் ·போன்ல?'

'அ...அது ஒன்ணுமில்லை. ஏதோ ராங் கால்னு நினைக்கிறேன்'. இயல்பாக இருக்க முயன்று தோற்றுப் போனார்.

'ஏங்க நீங்க ரொம்பப் பதட்டப்படற மாதிரி தெரியுது. டாக்டர்ட்ட ஒரு நடை போய் பார்த்துட்டு வந்திடலாமா?'

'ஏய்...அதெலாம் வேண்டாம். ஒரு பிரச்சனையும் இல்ல. முதல்ல சாப்பாடு வையி'

மனைவியிடம் ஏதோ சமாளித்தாரே தவிர உள்ளே அவரது இதயம் சற்று அதிகமாகவே துடிக்க ஆரம்பித்தது. அந்தக் குரல் யாருடையதாய் இருக்கும் என்ற யோசனை ஒரு புறம். காவல் துறையிடம் இதைச் சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பம் மறுபுறம்... கடனே என்று மனைவி பரிமாரிய உணவை விழுங்க ஆரம்பித்தார்.

இக்கதையின் முடிவு இப்படி இருந்திருக்கலாம்

எங்கோ இருட்டில் இருவர்...

'டேய் என்னடா இப்படி செஞ்சிட்ட?'

'பின்ன என்னடா... எம்.எல்.ஏ ஆன இந்த நாலு வருஷத்துல நம்ம தொகுதிக்கு ஏதாவது செஞ்சிருப்பானா இந்த ஆளு? எப்படியும் பத்து இருபது கோடி சேத்திருப்பான். இப்ப என்னோட இந்த பொய்யால அவனுக்கு இன்னும் ரெண்டு நாள் சோறு தண்ணி இறங்காது... பயலுக்கு ஹார்ட் அட்டாக் வந்தாக் கூட ஆச்சர்ய படுறதுக்கில்ல... ஏதோ என்னால முடிஞ்சது ஒரு ரூபாய்ல'

'அவன் போலீஸ்கிட்ட போனா உன்ன கண்டுபிடிக்க மாட்டாங்களா?'

'மாட்டாங்கடா...இந்த ஒரு ரூபாய் காயின் ·போன வேணா கண்டுபிடிப்பாங்க. சரி நாம ரொம்ப நேரம் இங்க இருக்கக் கூடாது. கிளம்பலாம்'

இருட்டில் மறைந்தார்கள்.

இப்படியும் இருந்திருக்கலாம்...

'குட்டிமா! ·போன் கிட்ட இருந்து என்ன பண்ணிக்கிட்டிருக்க?' சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள் மரகதம், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஏதோவொரு தொடரின் சத்தத்தை மட்டும் கேட்டுக்கொண்டே.

அவளது மூன்று வயது குழந்தை பாபு, நல்ல பிள்ளையாக தொலைபேசியை வைத்துவிட்டு அம்மாவிடம் சென்றான்.

அவன் அம்மாவிற்கு தெரிந்திருக்க நியாயமில்லை...அவன் ஏதோ ஒரு எண்ணிற்கு அழைத்ததையும், தொலைபேசி வாயை தொலைக்காட்சி நோக்கி வைத்ததையும், அந்நேரம் தொடரின் நாயகன், வில்லனுக்கு சவால் விட்டதும்.

Monday, June 22, 2009

ஏக்கம்

கல்லூரி முடித்து வேலையின்றி,
கண்களில் குற்றவுணர்ச்சி தேக்கி
எவரேனும் எப்பணிக்கேனும்
அழைக்க மாட்டார்களாவென ஏங்கி,
சொந்த வீட்டிலோ உறவு வீட்டிலோ
அண்டிப் பிழைக்கும் நாட்களில்,
வைரமுத்து கூற்று போல்
காதலித்தால் மட்டுமல்ல,
வேலைக்கான காத்தலிலும்
தபால்காரன் தெய்வமாகிறான்.

ஒவ்வொரு நாளும்
அவன் தெருவைக் கடக்கையில்,
கண்களின் ஏக்கம்
துரத்திச் செல்லும் அவனை.
தீவிரபக்தன் சாமி ஊர்வலம்
பின்னோடுவது போல்.

என்றோ அவன் தரப்போகும்
அந்த நியமன உத்தரவிற்காக
காத்துக் கிடக்கும் மனது.
பிராசாதத்திற்கேங்கும்
கோயில் பிச்சைக்காரன் போல்.

Saturday, June 20, 2009

யாரேனும் சொல்லுங்களேன்...

எப்பொழுதும்
பழைய பாடல்களே விரும்பும் அவளிடம்,
புதுப்பாடல்கள் ஏதேனும்
கேட்கச் சொல்லுங்களேன்...

அவள் சாய்வு நாற்காலியில் உட்காரும் போது
எனக்கு சுகமாய் இருக்கும் என்பதையும்
அவள் வயிறு குலுங்கச் சிரிக்கும் போது
ஊஞ்சலாடுவது போலிருக்கும் என்பதையும்
சேர்த்தேச் சொல்லுங்கள்.

முடிந்தால்...
யாரேனும் அவளை
சாய்வு நாற்காலியில் உட்காரச் செய்து
புதுப்பாடல்கள் கேட்கச் செய்து
அதிகம் சிரிக்க வையுங்களேன்...

கருவறையிலிருந்து வெளி வந்தவுடன்
மறவாமல் நன்றி சொல்வேன் உங்களுக்கு!

Monday, June 15, 2009

ஆகாய மேடை

தோல்விகள் ஆசையாய் அணிவகுத்து
எனைத் தேடி வந்த
அந்நாளில்
ஆகாயத்தில் மேடையொன்று கட்டி
என் கனவுகளை அரங்கேற்றி மகிழ்ந்து
உற்சாகப் படுத்திய நீ
இன்று
என் கனவுகள் உயிர் பெற்று
பூமியில் அரங்கேறும் போது
ஆகாயத்தின் மேல் நின்று
கண்டு சிரிக்கிறாய்!