Saturday, August 16, 2008

சித்தாந்தம்


சீருடை தவிர்த்து பேருந்தில் ஏறி அங்குச் சென்றேன். அந்த செக்போஸ்ட்டில் இறங்கி சுமார் நூறு அடி நடந்து காத்திருந்தேன். மோட்டார் பைக் ஒன்றில் சலிம் வந்தான். சென்ற முறை பார்த்ததிலிருந்து நிறையவே மாறியிருந்தான். பேச ஆரம்பித்தான்...


'சார் அந்த இயக்கத்தில் ஆள் சேர்க்கும் ஒரு மீடியேட்டர் இந்த ஊரில் தான் உள்ளான். நான் எப்படியும் ஒரு இரண்டு மாதங்களில் அவனது நம்பிக்கையைப் பெற்று இயக்கத்தில் சேர்ந்து விடுவேன். பின்னர் நம் ஏற்பாட்டின்படி ஒரு நன்னாளில் விஷயங்கள் சேகரித்துக் கொண்டு உங்களைப் பார்க்க வருகிறேன்'


'ம்ம்...தெளிவாகவேப் பேசுகிறாய். இந்தப் புத்தகங்களை வைத்துக் கொள். அவர்களிடம் பேசும்போது அவர்களின் சித்தாந்தங்கள் தெரிந்திருப்பது அவசியம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவுக்குள் இதனைப் படித்து முடி. அவர்களிடம் அதிகம் நெருங்க இது உதவும். இனி நாம் சந்திப்பது வேண்டாம். நம்பிக்கைப் பெற்று இயக்கத்தில் சேரும் முன் என்னிடம் ஒருமுறை தொலைப்பேசியில் பேசிவிடு'. கிளம்பினேன்...


இரண்டு மாதம் கழித்து, ஒரு மாலை வேளையில் என் அலைபேசி அலறியது.. புது எண்.


'ஹலோ!'. சலிம் தான். கொஞ்சம் பதற்றத்தோடு பேசுவதுபோல் இருந்தது.


'சார் என்னை மன்னிச்சிடுங்க. அவர்களின் சித்தாந்தங்களும் கொள்கைகளும் எனக்குச் சரியாகவே படுகின்றன. அவர்கள் நிலையில் ஆயுதம் ஏந்துவதிலும் தவறில்லை. நீங்கள் கூறியது போல் அவர்களிடம் சேரப் போகிறேன் - ஆனால் உண்மையாக'


'ஹலோ.... சலிம்! சலிம்!' அவன் தொடர்பில் இல்லை.

ஆய்வு


இரண்டு நாட்களுக்குப் பின் இப்பொழுது தான் வீடு திரும்புகிறேன்.

மிகவும் முக்கியமான சரித்திரத்தில் இடம் பெறக் கூடிய ஒரு பணியில் எங்கள் 'விண்வெளி ஆய்வு மையம்' இறங்கி இருந்தது. 'டெட் லைன்' நெருங்கிக் கொண்டிருந்ததால் எங்கள் குழுவில் அனைவரும் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்துக் கொண்டிருந்தோம். 'குவஸ்ட்' வின்வெளிக் கப்பல் உயிர்களின் நடமாட்டம் உள்ள அந்தக் கிரகத்தை முதலில் கண்டு சொல்லி ஆறு வருடங்களுக்கு மேலான நிலையில், இப்பொழுது அதனைப் பற்றிய முழு விவரம் சேகரித்துத் தருமாறு எங்கள் மையத்திற்கு உத்தரவு வந்துள்ளது. குறிப்பாக அதன் சீதோஷ்ண நிலை, அதன் பிரதான இனம்(Dominant Species) மற்றும் அவர்களின் அறிவியல் மற்றும் ஆயுத பலம் பற்றியச் செய்திகள். பல்வேறு உளவுக் கப்பல்கள் மூலம் ஒருவாறு முக்கியமான விஷயங்களை நாங்கள் சேகரித்தாயிற்று. மேலும் சில நுணுக்கமான தகவல்களுக்காக எங்கள் குழு உழைத்துக் கொண்டிருந்தது.


உணவு பரிமாறிய பின், என்றுமே என் பணி பற்றி கேட்காத என் மனைவி இன்று கேட்டாள். உற்சாகமாய் விளக்கினேன்.


'அவர்களை விட நாம் கிட்ட தட்ட 200 மடங்கு பலம் பொருந்தியவர்கள். அவர்களின் பிராதான இனத்தை விட நாம் உருவத்திலும் மூன்று மடங்கு அதிகம். அதனைக் கைப்பற்ற நமது சிறு படையே போதுமானது'.


'அந்த கிரகம் எங்குள்ளது?' ஆர்வமாய்க் கேட்டாள்.


'நாம் சென்ற வருடம் சுற்றுலா சென்றோமே 'எமி' கிரகம், அதிலிருந்து சரியாக 110 லை தொலைவில் உள்ளது. எர்த் என்று அழைக்கிறார்கள். சூரிய குடும்பத்தில் மூன்றாவது கிரகம்' என்றேன்

ஏக்கம்...

காலை படுக்கை மடிக்கும் முன்

உனது அழைப்போ குறுஞ்செய்தியோ,

வணக்கம் சொல்லும் எனக்கு.

அலுவல் நிமித்தம் அழைக்க மறந்தாலோ,

சிறுசினங் கொண்டு உனைத் திட்டினாலோ,

உன் தூய கண்ணீரால் தண்டிப்பாய் எனை

நானிங்கு உணவருந்தாவிடில், அங்கு விரதம் உனக்கு

சிறுதலைவலி ஆயினும், அன்னையின் அன்போடும் அக்கறையோடும்

ஒவ்வொரு மணியும் நலம் விசாரிப்பாய்

காணும் போதெலாம் பரிசுகள் அள்ளித்தருவாய்

பிரியும் வேளை ஆனந்த ஏக்கமும் உள்ளக் களிப்பும்,

மீண்டும் சந்திக்கும் நாளின் எதிர்பார்ப்பையும் விட்டுச்செல்வாய்.

இன்று....என்னுள் விட்டுச்சென்றிருக்கிறாய்....

உதிரம் கொட்டும் இதயத்தை!

மெளனம் கலைவாய்!



மெளனம் கலைவாய்!
மேகக் கடல் சொட்டும் ஓர் உயிர்த்
துளிக்கு
ஏங்கும் விவசாயி போல
உந்தன் ஓர் வார்த்தைக்கு ஏங்க வைக்கின்றாய் என்னை
மெளனம் கலைவாய் பெண்ணேமெளனம் கலைவாய்!

சொல்லினிது ஆயினும் வன்சொல்லாயினும்
சொல்லிவிட்டுச் சென்றுவிடு
இனிதாயின் இன்பத்தில் மிதப்பேன்
கடிதாயின் வடுவுடன் வாழப் பழகுவேன்
மெளனம் கலைவாய்!

காத்திருக்கும் பொழுது யாவும்
கத்தி பாதி செருகிய தொண்டையாய்
சிக்கித் தவித்து துன்புறுகிறேன்
முழுதும் செருகி அமைதி கொளச் செய் அல்லது
நீக்கிவிட்டு சிகிச்சை செய்।

மெளனம் கலைத்துவிடு!

மொட்டை மாடி



மொட்டை மாடியில் வார இதழின்
நான்கு வரி கவிதையை ரசித்தபடி நான்।

காய்ந்த துணிகளைப் பொறுக்க
கவிதைத் தொகுப்பாய் நுழைந்தாய்!

வார இதழை நான் மூட...
உன்மலர் இதழை நீ திறந்து,
'பனி பார்த்து!' என்றாய்।
'பரவாயில்லை' என்றேன்,
உன் விழி பார்த்து!

குறும்பு புன்னகை வீசிவிட்டு
பொறுக்கிச் சென்றாய்
துணிகளையும்,என் இதயத்தையும்!!!

கால் சென்டெர்!



வாசல் கோலம் போட பத்தில் மூன்று வீடுகளிலாவது எழுந்திருந்தனர்
மாணவர்கள் சிலர் ஒற்றை புத்தகத்தை சைக்கிளில் செருகி
வேகமாய்ச் சென்றனர், காலை சிறப்புப் பயிற்சி போலும்!
அரைக்கால் சட்டை அணிந்த சில தாத்தாக்களும்
முன்னால் நாயை விட்டு பின்னால் செல்லும் சில பெண்களும்
முன்னால் தத்தம் தொப்பையை விட்டு பின்னால் சில ஆண்களும்
காலை நேர சுகந்தத்தை அனுபவித்தபடி சென்றனர்!
பேப்பர் காரன்களும், பால் காரன்களும்
தத்தம் வேலைகளைச் செவ்வனே செய்து கொண்டிருந்தனர்!
சீறி வந்து என் வீட்டு வாசலில் என்னைத் துப்பிவிட்டுச்
சென்றது டாடா சுமொ ஒன்று, பாவம் மேலும் மூவர் உள்ளே!
இரவு நேர கால் சென்டர் பணி முடித்த
அசதியில்என் படுக்கையில் விழுந்தேன்!
பக்கத்து வீட்டில் சுப்ரபாதம் ஒலிக்க
ஜன்னல் வழி ஆதவன் எழுவது தெரிய
கண் அயர்ந்தேன்।
எங்கோ சேவல் கூவும் சத்தம்।




தீண்டாமை

சிலர் பிறக்கும் போதே தீண்டப்படாதவர்களாய்ப் பிறக்கின்றனர்.
நாங்களோ வளர்இளம்பருவத்தில் தீண்டப்படாதவர்களாய் ஆகின்றோம்
அல்லது ஆக்கப் படுகின்றோம்.

விரும்பி ஏற்பதில்லை எங்களில் யாரும்...
அரும்பு மீசை தொடங்கும் பருவம்
ஹார்மோனின் தப்புத் தாளங்களில் அபஸ்வரமாய் நாங்கள்
அவனா அவளா உலகத்தில் 'அது'வாகவே வாழ்கிறோம்- இறுதிவரை

'தான் யார், ஏன் பிறந்தோம்?' என்ற தேடல்
ஞாநிகளுக்கும் முனிகளுக்குமானது மட்டுமல்ல
எங்களுக்கும் ஆனது தான்.
அவர்கள் விருப்பத்தினால் நாங்கள் நிர்பந்தத்தினால்!

'டேய் அங்கு பாரு, அலிடா!' சொல்பவராகட்டும்
'ஷிட்! தேட்ஸ் எ ப்லட்டி ட்ரான்ஸ்ஜெண்டர்' விழிப்பவராகட்டும்
வார்த்தைகளும் மொழிகளும் மட்டுமே வேறுபடுகின்றன
நாங்கள் எப்பொழுதும் 'அது' 'இட்' தான்...

நாங்கள் தீண்டப்படாதவர்கள் சரி....
எங்கள் தீட்டிற்கு பரிகாரமே இல்லையா?
உயிர் விடுதல் தவிர...
விலங்குகளுக்கு கூட கருணை காட்டும் பக்குவம் உள்ளது
உங்களில் பலருக்கு... அது ஏன் நாங்கள் என்று வரும்போது
வற்றி விடுகின்றது மனித நேயம்?
ஒரு வேளை மனிதக் கூட்டத்தில் எங்களைச் சேர்க்கவில்லையோ?
நம்புங்கள் நாங்களும் மனிதர்கள் தான்...
இரத்தமும் சதையும் ஆனது தான் எங்கள் இதயம்
எங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு- உங்களைப் போல!