Sunday, June 6, 2010

துப்பாக்கி விசை

வீட்டு மாடியில் தொலைக்காட்சி ஈர்த்திருந்த தன் பத்து வயது மகனை ஒருமுறை பார்த்துவிட்டு கீழிறங்கி வந்தார், ஊழல் புகாரொன்றில் சிக்கியிருந்த அந்த ராணுவ மேஜர்.
^^^
முன் வாசல் கதவை மூடிவிட்டு அக்கதவில் சாய்ந்தவாறு, பெரிதாக மாட்டப்பட்டிருந்த அவரின் குடும்ப புகைப்படத்தைப் பார்த்தபடி துப்பாக்கி விசையை அழுத்தினார்.
^^^
கதவின் ஒருபுறம் நிசப்தம், மறுபுறம் ஒருவனின் அலறல் சத்தம்.
^^^
பீட்ஸா ஒன்றிற்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, வெகுநேரமானதால் மாடியில் பொறுமை இழந்துத் தவித்துக் கொண்டிருந்தான் மேஜரின் மகன்.

தூண்டில்

பார்வைக் கொக்கிகளால்
கடலில் மிதக்கும்
மீன்பிடி படகுகளுக்குத்
தூண்டிலிட்டபடி நான்,
கரைதனில் கனவுகளுடன்.

Saturday, May 29, 2010

அக்கினிப் பறவை

கடந்து செல்லும் உந்தன்
கடைக்கண் பார்வையின்
வீச்சு கிட்டாததால்
ஒரு அக்கினிப் பறவை
என்னுள் தோன்றி
தன் சிறகுகளை விரித்து
என்னை மெல்லென
பொசுக்க ஆரம்பித்தது...

போனால் போகிறதென்று
நீ வீசிய ஓரக்கண் பார்வையால்,
நீரூற்று ஒன்று என்னுள் தோன்றி
அத்தணலைத் தணிக்க ஆரம்பித்தது...

போகிற வாக்கில்
ஒரு புன்னகையும் சேர்த்து நீ பூத்திருந்தால்,
எனக்கே எனக்கான பிரத்யேக
பனிக்கட்டி மழையே பொழிந்திருக்குமே!!

"
"மனப்பாடச் செய்யுளாடா ஒப்பிக்கற?  அந்த...அந்த... ஒரு இதுவே  இல்லையே உன்கிட்ட...."
 
"உடம்ப ஏன் இவ்வளவு இருக்கமா வெச்சிருக்க?"
 
"Expression பத்தாது மச்சி"
 
"பத்துக்கு நாலு மார்க் கூட நான் தரமாட்டேன்"
 
"இன்னும் உனக்கு நிறைய பயிற்சி வேணும்டா"
 

ஏதோ நேர்முகத் தேர்வுக்குத்  தயார் படுத்துவது  போல் என்னைச் செதுக்கிக் கொண்டிருந்தனர் என் நண்பர்களான என் அறைவாசிகள். பாவம் அது அவர்கள் கவலை!  சுமார் ஒரு வருடமாய் என் புலம்பல்களால் இவர்களைப் படுத்தி எடுத்திருந்தேன். ஒரு தலையாய்க் காதலிக்கும் போதே இந்த அளவென்றால் ஒரு வேளை அவள் என் காதலை மறுக்கும் பட்சத்தில் என் புலம்பலின் அளவை நினைத்துப் பார்த்தே 'அந்த' முடிவுக்கு வந்தனர். அதவாது, என் காதலை அவளிடம் சொல்ல சுபதினம் ஒன்றைக் குறித்து அதற்கு முன்னர் என்னைத் தயார் படுத்துவது என்று.
 
காதல் சொல்வதற்கே பஞ்சாங்கம் பார்த்து நேரம் குறித்தான் ஜோசியத்தில் அதீத ஆர்வம் கொண்ட நண்பன். திங்கள் கிழமை வேண்டாம் என்றும் அன்று அலுவலகப்பளு  அதிகமென்றும்,  அவளின் எரிச்சலைக் கூட்டும் என்றும், அதுவே காதலை மறுக்க ஒரு காரணமாகுமென்றும்  லாஜிக் சொன்னான்  வேறொரு நண்பன்.  நீண்ட வாக்குவாதத்திற்குப் பின் ஒருவாறு அடுத்த மாதம் 3ஆம் தேதி புதன் கிழமையை நிச்சயித்தார்கள்.
 
முக்கியமான பிரச்சனை பின்னர் தான் வந்தது. அதாவது  'எவ்வாறு என் காதலை வெளிப்படுத்துவது' என்று. ஒரு சாரார் பழமை மிக்க பாரம்பரியமான 'மடல்' கொடுக்கும் முறையே சாலச் சிறந்ததென்றனர். மற்றொரு சாராரோ கண்கள் பார்த்து  'அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள்'  முறையே தக்கது என்றனர். 'நீயா நானா' முடிவில் இறுதியில் 'கண்கள் பார்த்துக் காதல் சொல்வதே சிறந்தது' என்று தீர்ப்பாயிற்று. என் துரதிர்ஷ்டம் அப்பொழுது தான் ஆரம்பித்தது. மடல் சாரர்  வென்றிருந்தால் எவனோ எழுதித் தரும் கவிதை தெளிக்கப்பட்ட  கடிதத்தோடு(அல்லது e -mail) முடிந்திருக்கும்.
 
ஆனால்.... இப்பொழுது இவர்கள் 'சிக்கிட்டாண்டா ஒருத்தன்' ரீதியிலேயே என்னை நடத்தினர். நான் ஊருக்குச் சென்ற ஒரு வாரஇறுதியில், அறைவாசிகள் அனைவரும் சனிக்கிழமை இரவு சேர்ந்து  உட்கார்ந்து ஒரு பக்க அளவிலான ஒரு பத்தியை எழுதி முடித்தனர். நான் என் காதலை அவளிடம் பகிரும்  பொது சொல்ல வேண்டிய வரிகளே ஆகும் அது.  இதற்காகச் செலவளித்த ஆறு ஹாஃப்  சிக்கன் மற்றும் 3 ஃபுல் பீர்-க்கான செலவை ஏற்க வேண்டிய தார்மீகக் கடமை எனக்குண்டு என்றும் தேவைப் பட்டால் மற்றுமொரு சிட்டிங் உட்கார்ந்து அப்பத்தியை மெருகேற்ற வேண்டி இருக்குமென்றும்  தோளில் கைபோட்டு ஆதரவாய்ச் சொன்னான் ஒருவன்.
 
தினமும் காலை ஆறு மணிக்கு வேலைக்குச் செல்லும் அறைவாசியொருவன் என்னை 'ஆறு மணிக்கெலாம்' எழுப்பி விட்டான். இரண்டு நாட்கள் அதை நான் மனப்பாடம் செய்ய எனக்குத் தரப்பட்ட கெடு. அதனையொட்டியே இந்த காலை சுப்ரபாதம் எனக்கு. இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஒரு மாலையில் நண்பர்கள் அனைவரும் கூடி என்னை நடுவில் நிற்க வைத்து அப்பத்தியைக் கூறச் செய்தனர். அப்போது வந்து விழுந்த கருத்துக் குத்துகளே முதலில் நான் பட்டியலிட்டது.
 
எனக்கு மேலும் பயிற்சி வேண்டும்  என்று முடிவாயிற்று. ஆறு மணி  ஐந்து மணி ஆயிற்று. பயிற்சியாளராக தினமும் அறைவாசிகளில் ஒருவர் சுழற்சி முறையில் என்னைக் கவனிக்க வேண்டும் என்றும் வார இறுதியில், கூட்டுப் பயிற்சி அளிப்பதேன்றும் முடிவாயிற்று. அவ்வாறு நியமிக்கப் படும் பயிற்சியாளரின் காலை உணவு மற்றும் இன்ன பிற செலவுகளை  நான் ஏற்க வேண்டுமென்றும்  முன்னரே சொன்னது போல் பத்தியை மெருகேற்ற ஆகும் வாரஇறுதி 'சிட்டிங்' செலவை ஏற்பது என் கடமையென்றும் மற்றொரு முறை எனக்கு நினைவூட்டினர்.   
 
பதினான்கு சாதாரண பயிற்சி தினங்கள், மூன்று கூட்டுப்பயிற்சி மற்றும் இரண்டு 'சிட்டிங்' கடந்த பின்னர் ஒரு வழியாக அந்தச் சுபதினமும் வந்தது. நண்பர்கள் அனைவரும் கை குலுக்கி அலுவலகத்திற்கு என்னை அனுப்பி வைத்தனர். நான் போட வேண்டிய உடையை முன்னரே தீர்மானித்து இருந்ததால் மற்றுமொரு வாக்குவாதம் தவிர்க்கப் பட்டது. 
 
குறிப்பிட்ட நேரம் நெருங்குகையில் 'Confident-ஆ இருடா.. உன்னால முடியும்' 'ஆல் தி பெஸ்ட்'  போன்ற குறுஞ்செய்திகள் வேறு என் நடுக்கத்தைக் கூட்டியது. 
 
சம்பவ நேரமும் வந்தது. வழக்கம் போல் இருவரும் காப்பி குடிக்கக் கிளம்பினோம். ஆரம்பித்தேன்...
 
'ஸ்வேதா...நா... '  நான் முடிப்பதற்குள் அவள் ஆரம்பித்தாள்.
 
'உன் கிட்ட கொஞ்சம் பேசனும்... '
 
இது என்னுடைய வரி ஆயிற்றே என்ற சிந்தனையில் நான் இருக்கும்போதே மேலும் சொல்லி முடித்தாள்.
 
' நேரடியாவே சொல்றேன். உன்னை நான் விரும்பறேன். உன்னைக் கல்யாணம் செய்ய ஆசைப்படறேன்.உனக்கு ஓகே வா? '
 
எனக்கு சந்தோஷத்தை விட ஏனோ அந்தப் பத்தியை அவளிடம் சொல்ல முடியவில்லையே என்ற ஏக்கம் தான் அதிகம் வந்தது.  

Monday, May 17, 2010

அரவம் இல்லா புற்று

என் குரலில் துக்கம் மறந்து  
என் பார்வையில் தூக்கம் தொலைத்து
என் கண்களில் அடைக்கலம் தேடும்
காதலியொருத்திக் காத்துக்கிடக்க
 
அடகுவைத்த நகைகளையும்
அடக்கிவைத்த புதுவீட்டு ஆசையையும்
என் சம்பளத்தில் மீட்டெடுக்க
விழைவோர் வீட்டிலிருக்க
 
சிலருடன் பகிர்ந்த கனவுகளும்
சிலாகித்து என்னுள் விதைத்த கனவுகளும்
நீண்டுயர்ந்துப் பரவிக் கிடக்க
 
சீரணக் கோளாறாய் இருக்குமென
சிகச்சை பெற சென்றவிடத்தில்
 
அரவம் இல்லா புற்று ஒன்று
அரவமில்லாமல் வயிற்றில் அடர்கிறதென்றனர்
ஆண்டு ஒன்று ஆயுள் அதிகமாம்
எனக்கும் என் உணர்வுக்கும்.
 
கனவுகளை எண்ணிய  நான்,
இப்பொழுதோ
நாட்களையே எண்ணுகிறேன்.

Monday, November 23, 2009

சில நேரங்களில்...

சில நேரங்களில்...
எங்கோ ஊற்றெடுத்த
யாருக்கோ சொந்தமான
என் கோபம்
உன் மீது திரும்பலாம்.

சில நேரங்களில்...
உன் கனவுகள் பட்டியலிடும்
உன் கண்கள் ஏங்கும்
பொருட்கள் யாவும்
வாங்கும் சக்தி
நம் வரவுக்கு
இல்லாமல் போகலாம்.

சில நேரங்களில்...
காய்ச்சலில் சரிந்து
களையற்ற முகத்துடன்
மூன்று நாள் தாடியுடன்
நான் படுக்கையில் கிடக்கலாம்.

சில நேரங்களில்...
சமூகத்தால் விதைக்கப்பட்டு
என்னுள்ளே அடைக்கப்பட்ட
ஆணாதிக்க எண்ணம் எப்பொழுதேனும்
வெளிவந்து உன்னைக் கீறலாம்.

இந்தத் தருணங்களைக் கடந்தும்
என் மீதான உன் காதல்
திருமணத்திற்குப் பின்
துளியேனும் குறையாது
தீர்க்கமாய் நிலைக்குமாயின்..

இந்தப் பூமியில் சொர்க்கமீனுவேன்.

Tuesday, October 27, 2009

நட்புப் பாலில் காதல் துளி....

நம் நட்புப் பாலில்

காதல் துளி விழுந்துவிட்டது.

என் காதலை 
உன்னிடம் சொல்வதால் 
நான் உன்னிடம் 
அந்நியப்பட்டுப் போகலாம்,
நீ மறுக்கும் பட்சத்தில். 

இந்த அபாயம் தெரிந்தே 
பறித்துச் செல்கிறேன் 
இன்றலர்ந்த ரோஜாவொன்றை. 

நம் நட்பிற்கு
இன்று மரணம் நிச்சயம். 
என் காதலை 
நீ ஏற்றாலும் 
ஏற்காவிடினும்!

ஏற்றால் உன் கூந்தலிலும் 
இல்லையெனின்
நம் நட்பின் கல்லறையிலும்
இந்த ரோஜா ஏறிக்கொள்ளும்.

Monday, August 31, 2009

ஒரு வரி, இரு வரிக் கதைகள் (2)

முன்பொருமுறை முயன்றது போல் ஓரிரு வரிகளில் கதை சொல்ல முயன்று பார்த்தேன் மறுபடியும். 'Science Fiction' கதைகளே எனக்குப் பெரும்பாலும் தோன்றுகிறது :-( . 


1.தலைப்பு: கி.பி. 3292

ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

"இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு - ' நீராவி எஞ்சின்' " 

2. தலைப்பு: பூமியை நெருங்கும் ஒரு விண்கலத்தினுள்....

"இந்த கிரக வாசிகளைப் பார், வித்தியாசமாய் இருக்கிறார்கள்! ஒரேயொரு சிறிய தலையுடன், இரண்டே கைகளுடன் நம் உள்ளங்கை அளவில் இருக்கிறார்கள். "

3. தலைப்பு: அவன்-அவள் மாற்றம்

மகனின் பதினாலாவது பிறந்த நாளுக்கு தந்தை ஆசையாய் இரண்டு சட்டைகள் வாங்கி வந்தார். மகனோ கண்ணாடி முன் தனிமையில் அக்காவின் உடைகளை அணிந்தபடி.

4. தலைப்பு: இயந்திரம் + மனிதன் 

உடம்பில் வெடிமருந்துகள் கட்டிக்கொண்டு கூட்டத்தில் சந்தேகம் ஏற்படாதவாறு நுழைந்தான் அவன். கணினியில் அவனுக்கு கட்டளைகள் பிறப்பித்தவாறு அந்த இயக்கத்தின் 'அறிவியல் பிரிவு' வல்லுனர்கள்.  

ட்டு வீடுகளிருந்தும் எப்போதும்
நடுத்தெரு வெயில் மழை தான்
கட்-அவுட்டில் சிரிக்கும் தலைவருக்கு.

***

றங்கிய பின்னும் இறங்க மறுக்கிறது
என்னுடைய கண்கள்.
பேருந்தினுள் நீ.

***

ன் இதயத்திற்கான விலையை
அறியக் கண்டேன்
உன் புன்னகையில்.

***

நிலவில் வடை சுடும் பாட்டி
யாருக்காக இவ்வளவு காலம்
சுட்டுக்கொண்டே இருக்கிறாள்?

***

ந்தப்புறம் பாட்டி
நிலவின்
மறுபுறம்?

Friday, August 28, 2009

வியாபாரம்

'ஹலோ...'

'ஹலோ ரகுராமன்!'

இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.

'ஆனா...என்னோட பேரு எப்படி உனக்குத் தெரியும்?'

'நீங்க வந்ததுமே உங்க முகத்த படம் பிடிச்சேன். அதை வெச்சு இணையத்துல நுழைஞ்சு 'உலக மக்கள் தகவல்கள்' தளத்த ஹேக் (Hack) செஞ்சு உங்க பேர கண்டுபிடிச்சேன்'

'இவ்வளவு சீக்கிரமாவா? '

'ம்ம்...நம்ப முடியலையா?'

'குட்... உன்ன மாதிரி சிலர பாத்திருக்கிறேன்... ஆனா நீ ரொம்ப புத்திசாலியா இருக்குற'

'பாராட்டுக்கு மிக்க நன்றி ரகுராமன்'

'சரி நேரா விஷயத்துக்கு வரேன்... உன்ன இப்ப நான் எதுக்காக வாங்கிச் செல்லனும்? நறுக்குன்னு பதில் சொல்லு பாக்கலாம்'

'மூணு காரணங்கள் இருக்கு ரகுராமன்'

'ஓ... சரி வரிசையா சொல்லு'

'முதலாவது, என்னால பங்குச் சந்தைல அடுத்த நாள் நடக்கிற விஷயங்களை 75% சதவீதம் துல்லியமா முதல் நாளே கணிக்க முடியும்... அதனால உங்களால நிறைய சம்பாதிக்க முடியும். இரண்டாவது, இப்ப உங்க வீட்ல இருக்குற மத்த எல்லா இயந்திர மனிதர்களை விட என்னால திறமையா வீட்டு வேலைகள் செய்ய முடியும்'

'மூணாவது விஷயம்?'

'நீங்க வந்த உடன நாம ரெண்டு பேரும் கைகுலுக்கும் போது உங்களோட உள்ளங்கை ரேகைய படம்பிடுச்சு பதிவுசெஞ்சு வெச்சிருக்கேன். இவ்வளவு நேரம் நீங்க பேசினதுல இருந்து உங்க குரலையும் பதிவு செஞ்சிருகேன். உங்களுக்கே தெரியும்.. இந்த இரண்டையும் வெச்சே உங்களோட வங்கிக் கணக்கு உள்ள என்னால நுழைய முடியும். நீங்க இப்ப என்ன வாங்கலைன்னா அடுத்து வரப் போற என்னோட எஜமான் கிட்ட என்னோட விசுவாசத்த காமிப்பேன்'

மெல்லிய புன்முறுவல் செய்தபின் தொடர்ந்தது...

'இந்தக் காரணங்கள் போதுமா?'

ரகுராமன் திகைத்துப் போனான்.


[கி.பி. 2035-இல் 'இயந்திர மனிதன் விற்பனைக் கடை'யினுள் நடந்த?!(நடக்கவிருக்கிற) ஒரு உரையாடல் ]

Friday, August 21, 2009

பிப்ரவரி 14

ந்தப் பெருநகரக் கடையில்
வாழ்த்து அட்டை பிரிவில்
அவனுக்குப் பணி நான்கு வருடங்களாய்.  

ஒவ்வொரு காதலர் தினத்திற்கும்
வாழ்த்து அட்டைகளும்
வரும் காதலர் எண்ணிக்கையும்
கூடிக்கொண்டே இருந்தது.
அவனது ஏக்கத்தைப் போல.  

இருப்பினும்...
ஒவ்வொரு காதலர் தினத்திற்கும்
மறவாது ஒரு வாழ்த்து அட்டை
பத்திரப்படுத்தி வைக்கிறான்.
என்றோ வரப் போகும்
தன் காதலிக்காக.  

ஏன்?

யாரோ என்னைக் கன்னத்தில் தட்டி எழுப்பினார்கள். கொஞ்சம் சிரமப்பட்டுதான் கண் திறந்துப் பார்த்தேன். டாக்டர் மற்றும் இரண்டு நர்ஸ்கள் நின்றிருந்தனர். வயிற்றிலிருந்துக் கசிந்த வலி எனக்கு அறுவை சிகிச்சை முடிந்துவிட்டதென்பதை என் மூளைக்குச் சொன்னது. இருந்தும் கேட்டேன்...

"டாக்டர்...சர்ஜரி முடிஞ்சிருச்சா?"


என் நா அன்று என் கட்டுபாட்டில் இல்லை. இப்படித் தெளிவாகக் கேட்க அன்று முடியவில்லை ஆயினும், நான் கேட்க நினைத்தது இது தான்.

டாக்டர்க்கு நான் கேட்டதுப் புரிந்தோ அல்லது யூகித்தோ சரியான பதிலே சொன்னார்.

"முடிஞ்சிருச்சுப்பா..எதுவும்  பிரச்சனை இல்லை. மூணு நாலு நாள் இங்க ஐ.சி.யூல இருக்க வேண்டி வரும். அப்புறம் உன்ன தனி ரூம்க்கு மாத்தலாம்".

"மணி என்ன டாக்டர்?"

"ஆறு ஆகுதுப்பா... ஒரு மணி நேரத்துல முடிச்சாச்சு"

"டாக்டர்..வலிக்குது...அம்மா அப்பா எங்க டாக்டர்?"

நர்ஸிடம் எனக்கு ஏற்கனவே ஏறிக் கொண்டிருந்த ட்ரிப்ஸ் பாட்டிலில் ஏதோ ஒரு மருந்தைக் கலக்கச் சொன்னார். இன்னொருவரை விட்டு என் பெற்றோரை அழைத்து வரச் செய்தார். என் அம்மாவும் அப்பாவும் என் கட்டில் அருகே வந்து ஏதோ பேசினர். பேசுகிறார்கள் என்று மட்டுமே தெரிய, வார்த்தைகளை உள் வாங்க முடியவில்லை. கண்கள் இருட்ட...தூங்கினேனா மயங்கினேனா என்று எனக்குத் தெரியவில்லை.


நான் மீண்டும் முழித்துப் பார்த்த போது என் அருகில் யாருமில்லை. என் கட்டில் சுற்றிலும் இருட்டு மட்டுமே. எங்கோயிருந்து கொஞ்சம் வெளிச்சமும், இருவரின் பேச்சுக் குரலும் கேட்டது. பதட்டத்தில் எழ முயற்சி செய்தேன். சம்மட்டியால் யாரோ வயிற்றில் அடித்தது போல் ஒரு வலி...

'ஆ.....' என்று கத்தியே விட்டேன். அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறேன் என்ற பிரஞ்ஞை அப்பொழுதுதான் வந்தது.

ஒரு நர்ஸ் ஓடி வந்தார்...

'என்னப்பா...என்ன ஆச்சு?'

'மணி என்ன சிஸ்டர்?' . 

அவர் என்னை வித்தியாசமாய்ப் பார்த்தார். மணி கேட்கவா இப்படிக் கத்தினான் என்று நினைத்திருப்பார்.

'நாலு ஆகுதுப்பா...' . சிறுது இடைவேளி விட்டு அவரே தொடர்ந்தார் 'காலைல 4 மணி'.

அவர் காலை என்று சேர்த்துச் சொன்னதற்குக் காரணம் உண்டு. அந்த கட்டிலில் இருந்த படியே ஒருவரால் அது இரவா பகலா என்று நிச்சயம் யூகிக்க முடியாது. சூரிய ஒளி சிறிதுமின்றி முற்றிலும் குளிரூட்டப்பட்ட அறை அது. என் கட்டிலின் வலது புறமும் பின் புறமும் சுவர் தான். இடது புறம் சுமார் எட்டு அடி உயரத்தில் அலுமினியத்தால் ஆன ஒரு தடுப்பு. மிச்சமிருந்த அந்த நாலாவது புறத்திலும் அடர் பச்சை நிறத்திலான ஒரு துணி வைத்துத் தற்காலிகமாய் ஒரு சுவர் எழுப்பியிருந்தனர். டாக்டரோ நர்ஸோ என்னைப் பார்க்க வரும் போது மட்டும் அந்தச் சுவர் நகர்த்தப் படும்.

எனக்கு அடிவயிற்றின் வலியை விட இன்னும் இங்கு மூன்று நாட்கள் இருக்க வேண்டி உள்ளதே என்ற கவலை தான் பெரும் வலியாய் இருந்தது. உடம்பு சரியில்லாமல் சமயத்தில் வீட்டில் படுக்க நேரிடும் போது, சோர்வினைப் போக்க தொலைக்காட்சியும் புத்தகங்களும் பெரிதும் உதவி செய்யும். ஆனால், இங்கு ஐ.சி.யூ.விலோ புத்தகங்களுக்கு அனுமதி இல்லை. செல்போனுக்கும் தடா. கிருமிகள் பயமாம். முழித்திருக்கும் நேரமே கொடுமையாய் இருக்கும். ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரு முறை பெற்றோர்கள் வந்துப் பார்க்க அனுமதி. அதுவும் ஐந்து நிமிடங்கள் தான்.

முதல் நாள் பெரும்பாலும் தூக்கத்திலேயே கழிந்தது. அதற்கான பிரத்யேக மருந்து ஏதும் தந்தார்களா என்றுத் தெரியவில்லை. முழித்திருந்த நேரத்தில் நான் கிரகித்த விஷயங்கள் இவை தான். அந்தப் பெரிய அறையில் சில மருத்துவ உபகரணங்கள் போக மேலும் ஐந்து கட்டில்கள் போடப்படிருந்தன - மேலும் ஐந்து குட்டிச் சிறைச்சாலைகள்! அவற்றில் என் இடது புற கட்டில் மட்டுமே வெறுமையாய். எந்நேரமும் இரு நர்ஸ்கள் பணியில் இருந்தனர். நோயாளிகள் யாரேனும் லேசாக முனங்கினால் கூட என்னவென்று போய்ப் பார்ப்பார்கள்.

மாத்திரை கொடுத்து ஏறிக் கொண்டிருந்த டிரிப்ஸை நர்ஸ் நிறுத்தி, 'குட் நைட்' சொல்லிச் சென்றபோது வெற்றிகரமாய் முதல் நாள் முடிந்தது எனக்குத் தெரிந்தது.

தூங்க ஆரம்பித்த நேரம் ஏதோ சத்தம் கேட்டு முழுதாய் விழித்தேன். புதிதாய் யாரோ ஒரு நோயாளி வந்திருக்கிறார் போலும். சீஃப் டாக்டர் குரலுடன் மற்றொரு டாக்டர் மற்றும் மூன்று நர்ஸ்களின் குரல்களும் கேட்டன. எதோ பதட்டமான விஷயம் என்பது மட்டும் அப்போது எனக்குப் புரிந்தது.

'என்ன சிஸ்டர் நீங்களே இப்படிப் பண்ணலாமா? ' , சீஃப் டாக்டர் சற்றே கோபத்துடன் கேட்டார்.

போதையில் இருப்பவர் உளறுவது போல் ஒரு பெண்ணின் குரல் கேட்டது. அப்பெண்ணின் குரல் கொஞ்சம் சத்தமாகவே ஒலித்தது. நிச்சயம் என்னைப் போல் ஐ.சி.யூ.விலுள்ள மற்ற நான்கு நோயாளிகளும் விழித்திருப்பர்.

பேச்சுக் குரல்களை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பிதேன். அக்குரல்கள் எனக்குத் தெரிவித்த விஷயங்கள் இவை தான்:

அந்தப் புது நோயாளியின் பெயர் சாந்தி. இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை இந்த மருத்துவமனையில் தான் நர்சாக வேலை செய்திருக்கிறார். என்னக் காரணத்தினாலோ வேலையை விட்டுவிட்டு மற்றொரு மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார். திருமணம் ஆகவில்லை. உடன் அவர் தாய் மட்டுமே.

இப்போது தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். எதோ ஒரு மருந்து உட்கொண்டிருக்கிறார். அது மாத்திரையா அல்லது ஏதேனும் ஊசியா என்றுக் கூடத் தெரியவில்லை. அதைத் தெரிந்துக் கொள்ளும் முயற்சியில் தான் மற்றவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இப்போது பாதி மயக்கத்தில் இருக்கிறார்.

டாக்டர் ஏற்கனவே அவர் தாயுடன் இன்னொரு நர்சை அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அனுப்பியுள்ளார், ஏதேனும் மாத்திரைத் தாள், ஊசி மருந்துப் புட்டி கிடைக்கிறதா என்று. அந்தப் பெண்ணின் தாய் இன்னும் வரவில்லை போலும்.

'சிஸ்டர்! ப்ளீஸ்... கோ- ஆப்பரேட் பண்ணுங்க... என்ன மருந்து எடுத்துக்கிட்டீங்க?'

'சொல்ல மாட்டேன்... மாட்டேன்....மாட்டேன். என்ன சாக விடுங்க'

இன்னும் சுயநினைவுடன் தான் இருக்கிறார். ஆனால் வாய் குளறுகிறது.

'சிஸ்டர்... உங்க அம்மாவப் பாருங்க. அவங்கள கஷ்டபடுத்திட்டு நீங்க போகனுமா? என்ன மருந்துன்னு சொன்னாதான் ட்ரீட்மென்ட் கொடுக்க வசதியா இருக்கும்..உங்களுக்குத் தெரியாததா? '

'என்ன சாக விடுங்க...ப்ளீஸ்..கெஞ்சிக் கேட்டுக்கறேன்...என்ன விட்டுடுங்க ' அந்தப் பெண் அழ ஆரம்பித்தார்.

நேரம் ஆக ஆக அந்தப் பெண்ணின் உளறல் சத்தம் அதிகமானது. பேய் பிடித்ததுப் போல் கத்தினார். எல்லோரையும் மரியாதைக் குறைவாகப் பேச ஆரம்பித்தார். யாரையும் அவர் அருகில் கூட நெருங்க விடாது கூப்பாடு போட ஆரம்பித்தார்.

மற்ற நோயாளிகள் எல்லாம் நர்சுகளைக் கூப்பிட்டு என்னவென்று கேட்டனர். சீஃப் டாக்டர் ஒவ்வொரு படுக்கைக்கும் போய் ஒன்றுமில்லையென்றும் அவர்களைத் தூங்கச் சொல்லியும் சமாதானப் படுத்தினார்.

என்னுடைய திரைச் சீலையை விலக்கி எட்டிப் பார்த்தார். கொட்ட கொட்ட முழித்திருக்கும் என்னை ஆச்சர்யத்துடன் பார்த்தார்.எந்தக் குரலும் என்னிடமிருந்து வராததால், தூங்கிக் கொண்டிருப்பேன் என்றெண்ணி இருப்பார் போல.

'என்னப்பா தூங்கலியா? '

'இல்ல டாக்டர்... தூங்கினேன். இப்பதான்...'

'என்ன அந்த அம்மா போடற சத்தத்துல பயந்துட்டியா?'

'இல்...இல்லை டாக்டர்... பயப்படல...'

அவர் என் கண்களையே உற்றுப் பார்த்தார். நிச்சயமாக நான் சொன்னதை அவர் நம்பவில்லை. நானே தொடர்ந்தேன்..

'ஆனா ஒரு மாதிரியா இருக்கு டாக்டர்...'

நான் பதட்டத்தில் இருந்தது உண்மை. அந்த ஏ.சி குளிரிலும் வியர்த்துதான் போயிருந்தேன். அவர் என்னருகில் வந்து ஸ்டதஸ்கோப் உபயத்தில் வழக்கம் போல் இழுத்து மூச்சு விட வைத்து என்னமோ கூர்ந்துக் கவனித்தார். பி.பி அளவையும், நாடித் துடிப்பையும் சோதித்தார்.

என்னையே சில விநாடிகள் பார்த்தவாறு இருந்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை ...

'இப்ப உன்ன ரூம்க்கு மாத்திடறேன்... இன்னும் ஒரு அரை மணி நேரத்துல ரூம ரெடி பண்ணிட்டு உன்ன கூட்டிட்டு போகச் சொல்றேன்.'

ஏன் மாற்றச் சொன்னார் என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அந்தப் பெண் தான் காரணம். இப்பொது டாக்டரின் செல்போன் ஒலித்தது. 'ஹலோ' சொல்லிக் கொண்டே என் திரைச் சீலையை மீண்டும் மூடிவிட்டு மறைந்தார். அநேகமாக இந்தப் பெண்ணின் வீட்டிலிருந்து தான் அழைப்பு வந்திருக்கும்.

அந்தப் பெண்ணின் சத்தம் இப்போது வெகுவாகக் குறைந்திருந்தது. களைத்திருப்பார் போல. டாக்டர் இப்போது மற்றவர்களிடம் ஏதோ வேகமாய் சொல்லிக் கொண்டிருந்தார். மற்றவர்கள் பரபரப்பாயினர். என் இடப்புறக் கட்டிலில் அந்தப் பெண் கிடத்தப்படும் சத்தம் கேட்டது. அந்தப் பெண்ணிடம் இருந்து எந்தச் சத்தமும் இல்லை. மயக்க ஊசியோ அல்லது வேறேதும் மருந்தோ தந்திருக்கலாம்.

என் சிந்தனை இதிலிருந்து விலகி இப்போது வெளியில் செல்வதிலயே லயித்திருந்தது. எனக்கு என் வலி, அந்தப் பெண்ணின் நினைவுகள் அனைத்தையும் மீறி நான் இந்தச் சிறைச்சாலையிலிருந்து இன்னும் சிறுது நேரத்தில் விடுதலை ஆகப் போகிறேன் என்பதே என் எண்ணத்தில் பிரதானமாய் இருந்தது.

சிறுது நேரத்தில்...

கட்டிலில் இருந்த என்னை, என் தந்தையும் ஒரு நர்சும் மெதுவாக சக்கர நாற்காலிக்கு இடம் மாற்றினார்கள். என்னை இந்தச் சிறையிலிருந்து மீட்ட அந்தப் பெண்ணைப் பார்க்க ஏனோ எனக்கு ஆவலாய் இருந்தது. என் தந்தை மெதுவாகத் தள்ள ஆரம்பிக்க, என் பார்வை முழுதும் அந்தப் பக்கத்துக் கட்டில் நோக்கியே இருந்தது. ஆனால் பச்சைத் திரைச்சீலையால் மூடப்பட்டிருந்த அந்த கட்டிலின் காலைக் கூட என்னால் பார்க்க முடியவில்லை.

முதல் தளத்திலிருந்த ஐ.ஸி.யூ.விலிருந்து வெளி வந்தேன். குளிரூட்டப்பட்ட ஏ.சி அறையிலிருந்து வெளி வந்தவுடன் வெக்கைக் காற்று உடலைத் தாக்கினாலும், சுதந்திரக் காற்று மனதிற்கு இதமாய் இருந்தது. எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை இரண்டாவது தளத்திலிருந்தது. ஒரு இரண்டு நிமிட சக்கர நாற்காலிப் பயணத்தில் என் அறை வந்துச் சேர்ந்தேன்.

அடுத்த வந்த நாட்கள் அந்த அறையில் தான். இங்கும் கட்டில்தானாயினும், என்னால் புத்தகம் படிக்க முடிந்தது, நண்பர்கள் உறவினர்களுடன் பேச முடிந்தது ஆறுதலாய் இருந்தது. சமயத்தில் தத்தித் தத்தி சன்னல் பக்கம் வந்து சாலையையும் பார்க்க முடிந்தது. ஆனாலும் அந்தப் பக்கத்துக் கட்டில் பெண்ணின் நினைவு அவ்வபோது வந்துப் போகும்.

அந்தப் பெண் குணமடைந்து மூன்று நாட்களில் டிச்சார்ஜ் ஆகிச் சென்று விட்டார் என்று மற்றொரு நர்ஸ் மூலம் தெரிய வந்தது

தையல் பிரிக்கப்பட்டு, ஏழாவது நாள் வீட்டுக்குச் செல்ல அனுமதி தந்தார் முதன்மை மருத்துவர். பத்து நாட்கள் கழித்து வந்துப் பார்க்குமாறு சொல்லி அனுப்பினார்.

எப்போதும் பார்த்த வீடாயினும் அன்று நுழையும் போது ஏதோ சொர்க்கத்தில் நுழைவது போலிருந்தது. நடப்பதில் பெரிய சிரமம் இல்லையெனினும் மருத்துவரின் அறிவுரைப்படி, பெரும்பாலும் கட்டிலிலேயேக் கழித்தேன். தொலைக்காட்சி எனக்கு உற்றத் துணைவனாய் இருந்தது.

த்து நாட்கள் கழித்து என் அம்மாவுடன் மீண்டும் மருத்துவமனை சென்றேன்.

வெளி நோயாளி பிரிவில் டோக்கன் வாங்கிக் காத்திருந்தோம். அவ்வழியே சென்ற பரிச்சயமான ஒரு நர்ஸ் என்னைப் பார்த்துப் புன்னைகைத்து என் பக்கம் வந்தார்.

'எப்படிப்பா இருக்கிற?'

'இப்ப ஒண்ணும் பிரச்னை இல்லை சிஸ்டர்'

என் அம்மா பக்கம் திருப்பிய அவர்,

'என்னம்மா வீட்ல என்ன செய்யறான்? இங்க இருக்கும் போது போரடிக்குது போரடிக்குதுனு சொல்லிட்டே இருப்பானே!'

'அங்க முழு நேரமும் டி-வி தான். சில சமயம் ஏதாவது படிச்சிட்டு இருப்பான். சிஸ்டர்! அந்த சாந்தி சிஸ்டர் எப்படி இருக்காங்க?'

நான் கேட்க நினைத்துத் தயங்கிய கேள்வியை என் அம்மா கேட்டே விட்டார்.

"அவங்க இப்ப இல்லம்மா.. இங்க அட்மிட் ஆன மூணாவது நாளே அவங்க டிச்சார்ஜ் ஆகி போய்ட்டாங்க... போகும் போது கூட நல்ல சிரிச்ச முகமாதான் போனாங்க... அப்படிப் பண்ணினதுக்கு ரொம்ப வருத்தப் பட்டாங்க என்கிட்ட. இனிமே இந்த மாதிரி பண்ணக் கூடாதுன்னு சத்தியம் வாங்கினேன்.ப்ச்...ஆனா என்ன நடந்ததோ தெரியல... என்ன காரணம்னு அவங்க அம்மாக்குக் கூட தெரியல. மறுபடியும் நாலு நாள் முன்னாடி ஒரு அட்டெம்ப்ட் பண்ணி இருக்கிறாங்க. இங்க தான் கொண்டு வந்தாங்க... ஆன வரும் போதே உயிர் இல்ல. " ... 

அவர் சொல்லி முடிக்கும் போதே, அவர் கண்களில் நீர் கோர்த்திருந்தது. என் கண்களும் கலங்கியிருந்தன; இதுவரை முகம் பார்க்காத, எந்தச் சம்பந்தமும் இல்லாத அந்தப் பெண்ணுக்காக.

அவர் ஏன் சாவை மீண்டும் மீண்டும் தேடிப் போனார்?

Tuesday, August 18, 2009

பிணம்

ழி நெடுக பூக்களும்
சேருமிடம் சேர்ந்ததும் 
கல்லும் மண்ணும்
தூவப் படுகிறது.
'அவர்' 'அது' வானதால்.

ரு வருடமாய் 
பெய்யாத மழை 
நீ ஊருக்குச் சென்ற
மூன்று நாட்களும் பெய்தது. 

ஆசையாய் வளர்த்த 
ரோஜாச் செடிக்கு 
நீரூற்ற ஆள் இல்லையென 
அரை மனதுடன் நீ சென்றது
அந்த வானத்திற்குத்
தெரிந்தது போலும் 

வார விடுமுறையில்
டவுன் வந்து
சினிமா பார்த்து
வெளியே வரும் போது
தினக்கூலி கண்ணனின்
பையில் பத்து ரூபாய் மட்டுமே.

நான்கு ரூபாய் பேருந்துப் பயணத்தைத் தவிர்த்து
ஒரு மணி நேரம் வெயிலில் நடந்து
வழியில் விசாரித்த நண்பனிடம்
உணவருந்தியதாய்ப் புழுகி
ஊர் வந்ததும்
பத்து ரூபாய்க்கு
டாப்-அப் செய்து
அவசரமாய்
நண்பர்களுக்கு ஃபார்வர்ட் செய்தான்.
நமீதா பற்றிய கிசுகிசுவை .