‘சத்யா குடிச்சிருக்கியா?’
'ம்ம்...கொஞ்சம் தான் மது. ஒரு ரெண்டு சிப். அவ்ளோதான்'
மதுவிற்கு கோபம் தலைக்கேறியது. திருமணத்திற்கு முன்பே மதுவிடம் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது, "நட்சத்திர ஹோட்டலில் வேலையில் இருந்தாலும் சத்யா குடிப்பதில்லை, புகைப்பதில்லை" என்று.
மதுவின் கண்களை நேர் கொண்டு காண முடியவில்லை சத்யாவிற்கு.
'இல்லை மது... இன்னைக்கு ஒரு க்ளையண்ட் என்ன குடிக்கச் சொல்லி ரொம்ப வற்புறுத்தினார். நான் இப்போலாம் குடிப்பதில்லைனு எவ்வளவவோ சொல்லிப் பார்த்தேன்... அவர் கேட்கலை. வேற வழி இல்லாம கொஞ்சம் குடிச்சேன் அவ்ளோதான்'.
மதுவிற்கு கோபம் தணிந்ததாய்த் தெரியவில்லை. சத்யா தொடர்ந்து,
'புரிஞ்சிக்கோ மது.... நான் வேணும்னு குடிக்கல. இனிமே கண்டிப்பா குடிக்க மாட்டேன்....இது சத்தியம்'.
திருமணமான இந்த ஏழு மாதங்களில் சத்யா இந்த அளவு கலங்கி மது பார்த்ததில்லை.
“சத்யா... நீ என்ன சமாதானம் சொன்னாலும் நீ செஞ்சது தப்புதான். நல்ல வேளை இன்னைக்கு அம்மா ஊர்ல இல்லை. மருமகள் குடிச்சிட்டு வீட்டுக்கு வர்ரது அவங்களுக்குத் தெரிஞ்சா எவ்வளவு கஷ்டப்படுவாங்க. இனிமேலாவது கவனமா இருந்துக்கோ'”
தலை அசைத்தவாறு உடை மாற்றச் சென்றாள் சத்யா என்ற சத்யப்பிரியா. அவளைப் புதிராய்ப் பார்த்தான் மது என்ற மது சூதனன்.