Thursday, July 24, 2008

ஏற்பாயா?



மலைப் பாதையின் வளைசாலைகளில்
ஒற்றை குடை பிடித்து சாரல் துளிகளைக்
குடையில் பாதியும் உடையில் மீதியும் தாங்கி
உந்தன் கைப்பிடித்து தோள் அணைத்து
நடந்து செல்ல ஆசை

வேலை நாளொன்றில் நீ எழுமுன் நானெழுந்து
சமையல் அத்தனையும் முடித்து தேனீர் கோப்பையுடன்
உனையெழுப்பி 'நான் உன்னைக் காதலிக்கின்றேன்!'
என்று சொல்ல ஆசை

தொலைக்காட்சி சப்தமில்லா
தொ(ல்)லைப்பேசி அலறலில்லா
மின்சாரமில்லா ஓரிரவில்
என்னுடன் நீ பேசும் வார்த்தைகளைக்
கோர்த்து கவிதையாய்த் தொடுக்க ஆசை

உன் பள்ளி கல்லூரி நாட்களில் நீ வரைந்த
ஓவியங்களை உன் தந்தையிடம் பெற்று
கண்ணாடிச் சாரங்களில் பாதுகாத்து
நம் வீட்டு வரவேற்பறையில் மாட்டி
உன் கண்கள் மிளிரும் கண்ணீரையும்
உன் உதடுகள் துளிர்க்கும் முத்தத்தையும்
உணர ஆசை

உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா?

எப்படிப் புரிய வைப்பேன்?



உனைக் காதலித்தும் கவிதை எழுத வரவில்லையாம் எனக்கு!
கேலிப் பேசுகிறார்கள் என்னை.
எப்படிப் புரியவைப்பது அவர்களுக்கு
'உன்னில் நான் படிக்க வேண்டிய கவிதைகளே
யுகங்களாய் நீண்டிருக்க...
எப்படித் தொடங்குவேன்
ஒரு புதிய கவிதைக்கான அகரத்தை?'

Wednesday, July 16, 2008















கால் பதியா குழந்தையின் பாதம் தொட்டு

கண்ணீர் வழியும் கண்களில் ஒற்றினாள்

கைகளில் அள்ளி, உச்சி முகர்ந்தாள்

குளிப்பாட்டி உணவளித்து, தாலாட்டித் தூங்க வைத்தாள்

மாலை வந்த தாயிடம் பிரிய மனமின்றி ஒப்படைத்தாள்

வீடும் அவள் மனமும் வெறுமையானது.

செல்வம் பல கொட்டிக் கிடந்தும்

மழலைச் செல்வம் இல்லாமையின் வலியைப்

பெருக்கெடுக்கும் அவள் விழி நீர் சொன்னது!





'மதில் மேல் ஒரு பூனை

















மருத்துவமனையின் பல உபகரணங்கள் சுற்றியிருக்க
விழிகள் மூடியபடி படுக்கையில் என் தாய்.
'கடைசி காலத்துல என்னைய கஷ்டபடுத்தாதடா...

பொட்டுனு ஒரு ஊசிய போட்டு கொன்னுபுடுடா,
உனக்குப் புண்ணியமாப் போவும்!'
வாரம் பத்து முறையாவது
வாய் வலிக்க ஒப்பிப்பாள்.
பக்கவாதத்தின் பலனால் இடப்புறம் முழுதும் செயலற்று,

சிறுநீர் கழிக்கும் உணர்வுகூட இன்றி,
இரத்த அழுத்தம், சர்க்கரை நோயின்
அரவணைப்பில் கிடக்கும் போதும்,
இதையேச் சொன்னாள் திரும்பத் திரும்ப
விழிகள் திறக்கும் போதெலாம்!

அறையிலிருந்து வெளிவந்து
விறுவிறுவென வளாகத்தின் வாசல் வந்தேன்.
'வணக்கம் டாக்டர்' என்று வழிநெடுக கேட்ட குரல்களுக்கு
பதில் வணக்கம் கூட சொல்லத் தோன்றாமல்.
வெளி சுவற்றின் மீது என் பார்வை நிலைக் குத்தியது.
'மதில் மேல் ஒரு பூனை நின்றது!'