Tuesday, April 28, 2009

Inspiration from Vairamuthu's 'Duet' Lyrics

இமை பூட்டும் என் கருவிழியில் சிறைபட்டவளும் நீ தான்

இமை கிழித்து நீர் வழி வெளி வந்தவளும் நீ தான்


பெரும் ஓவியங்கள் தோற்றிடும் பேரழகும் நீ தான்

நெடுந் துயரதில் எனை ஆழ்த்தியவளும் நீ தான்

சங்கக் கவிகளை உயிர்த்தெழச் செய்தவளும் நீ தான்

சகமனிதர்களைப் புன்னகையால் கொன்றவளும் நீ தான்


பெண்ணின் இலக்கணம் வரைந்தவளும் நீ தான்

பிரிவின் வலி நெஞ்சில் குத்தியவளும் நீ தான்


உடல் தின்னும் தீயைச் சுட்டவளும் நீ தான்

உயிர் போக்கும் அமிலத்தைச் சுரந்தவளும் நீ தான்


காதலின் அரிச்சுவடி எனக்குத் தந்தவளும் நீ தான்

காலனின் வருகை வழி காட்டியவளும் நீ தான்


என் கவிதைக்குக் கருப்பொருளாய் இருந்தவளும் நீ தான்

என் கண்ணீரின் காரணியாய் இருப்பவளும் நீ தான்।


(An inspiration from Vairamuthu's 'Duet' Lyrics )

நான் | நீ | காதல்

நான் என்பது நீயாக

நீ என்பது நானாக

இருவரும் நாமானோம்.

பிறிதொரு ஊடலில்

நாம் என்பது நானாக

நீ என்பது நீயாகவேயிருக்க

நானோ இன்னும்

நீயாகவே உள்ளேன்!

வாழை நடும் வேளை

உன் கண்ணிரண்டு கொண்டு

நெருங்கினால் வாள் வீசுகிறாய்

மறுகிச் சென்றால் அம்பு தொடுக்கிறாய்।


கன்னியுன் போர் யுக்தியில்

சல்லியாய் நொருங்குகிறது மனம்.

சமாதானக் கொடி நீட்டுகிறேன்

சாகும் வரை உன்னடிமையென

சாசனம் தருகிறேன்.

வாளையும் வில்லையும் வீசிவிட்டு

உன் வீட்டில் வாழை நடச் செய்!

Monday, April 27, 2009

அவள் மனம் -2

அன்று பெய்த மழையின்

முன்னோட்டமாய் மின்னிய மின்னல்

உன் பெயரை வானில்

அச்சடித்துச் சென்றது என்றேன்!


உன் கவிதை பிரசுரித்த

பத்திரிகையின் பெயர் சொல்லி

கோயில் அர்ச்சனை செய்யலாமா

என்றென் ஐயம் பகர்ந்தேன்!


அலுவல் நிமித்தம் நீயெனைப் பிரிந்த

ஆறு நாட்களும் நான் வாங்கிய

புத்தகத்திலிருந்த பாம்பு உயிர்பெற்று

எனை மிரட்டியதையும்

புகைப்படத்திலிருந்த நீ உயிர்த்தெழுந்து

அதை விரட்டி எனைக் காத்ததையும்

சொன்னேன் என் தோழிகளிடம்!


இவற்றை

எழுத யத்தனிக்கும் பொழுதெலாம்

என் காகித ஓடையில்

என் பேனா விதைத்த வார்த்தை மீன் குஞ்சுகள்

நீந்த ஆரம்பித்து துள்ள ஆரம்பிக்கின்றன.

அதை ரசித்தபடியே கடலில் சேர்த்துவிடுகிறேன்!


சொற்களின் சேர்க்கை பிடிபடாததால்

உளறுகிறேன் என்றெண்ணி

அடைத்து விட்டார்கள்

மனநலக் காப்பகத்தில்।


இதையெலாம்

கவித்துவமாய் எழுதத் தெரிந்திருந்தால்

'கவிஞர்' பட்டம் தந்திருப்பார்களோ?

அவள் மனம் -1

உன்னோடு பின்னமர்ந்து

வண்டியில் செல்லும்போதோ

எனக்கான புடவையெடுக்க

கடையில் சுற்றும்போதோ

எனைச் சீண்டுவதற்காக நீ

சுட்டிக் காட்டும் அழகியப் பெண்களை

நான் பெரிதாக எடுத்ததில்லை।

'உனக்கு நானே அதிகம்' என்று

உன் வாயடைப்பேன்।

இருப்பினும்,

மனதின் ஏதோ ஒரு மூலையில்

பொறாமைத்தீ பற்றிக் கொள்வதைத்

தவிர்க்க முடியவில்லை!

கைப்பேசி

காற்றுக் குதிரையில்
அந்தி சாயும் வேளையில்
பவனி வரும்
உன் மெஸ்மரிஸ குரலில்
மிதக்கும் வர்ணனைகளைக்
கேட்பதற்காகவே வாங்கியிருக்கிறேன்
வானொலி வசதி கொண்ட
ஒரு புதிய கைப்பேசியை!