Saturday, May 29, 2010

அக்கினிப் பறவை

கடந்து செல்லும் உந்தன்
கடைக்கண் பார்வையின்
வீச்சு கிட்டாததால்
ஒரு அக்கினிப் பறவை
என்னுள் தோன்றி
தன் சிறகுகளை விரித்து
என்னை மெல்லென
பொசுக்க ஆரம்பித்தது...

போனால் போகிறதென்று
நீ வீசிய ஓரக்கண் பார்வையால்,
நீரூற்று ஒன்று என்னுள் தோன்றி
அத்தணலைத் தணிக்க ஆரம்பித்தது...

போகிற வாக்கில்
ஒரு புன்னகையும் சேர்த்து நீ பூத்திருந்தால்,
எனக்கே எனக்கான பிரத்யேக
பனிக்கட்டி மழையே பொழிந்திருக்குமே!!

"
"மனப்பாடச் செய்யுளாடா ஒப்பிக்கற?  அந்த...அந்த... ஒரு இதுவே  இல்லையே உன்கிட்ட...."
 
"உடம்ப ஏன் இவ்வளவு இருக்கமா வெச்சிருக்க?"
 
"Expression பத்தாது மச்சி"
 
"பத்துக்கு நாலு மார்க் கூட நான் தரமாட்டேன்"
 
"இன்னும் உனக்கு நிறைய பயிற்சி வேணும்டா"
 

ஏதோ நேர்முகத் தேர்வுக்குத்  தயார் படுத்துவது  போல் என்னைச் செதுக்கிக் கொண்டிருந்தனர் என் நண்பர்களான என் அறைவாசிகள். பாவம் அது அவர்கள் கவலை!  சுமார் ஒரு வருடமாய் என் புலம்பல்களால் இவர்களைப் படுத்தி எடுத்திருந்தேன். ஒரு தலையாய்க் காதலிக்கும் போதே இந்த அளவென்றால் ஒரு வேளை அவள் என் காதலை மறுக்கும் பட்சத்தில் என் புலம்பலின் அளவை நினைத்துப் பார்த்தே 'அந்த' முடிவுக்கு வந்தனர். அதவாது, என் காதலை அவளிடம் சொல்ல சுபதினம் ஒன்றைக் குறித்து அதற்கு முன்னர் என்னைத் தயார் படுத்துவது என்று.
 
காதல் சொல்வதற்கே பஞ்சாங்கம் பார்த்து நேரம் குறித்தான் ஜோசியத்தில் அதீத ஆர்வம் கொண்ட நண்பன். திங்கள் கிழமை வேண்டாம் என்றும் அன்று அலுவலகப்பளு  அதிகமென்றும்,  அவளின் எரிச்சலைக் கூட்டும் என்றும், அதுவே காதலை மறுக்க ஒரு காரணமாகுமென்றும்  லாஜிக் சொன்னான்  வேறொரு நண்பன்.  நீண்ட வாக்குவாதத்திற்குப் பின் ஒருவாறு அடுத்த மாதம் 3ஆம் தேதி புதன் கிழமையை நிச்சயித்தார்கள்.
 
முக்கியமான பிரச்சனை பின்னர் தான் வந்தது. அதாவது  'எவ்வாறு என் காதலை வெளிப்படுத்துவது' என்று. ஒரு சாரார் பழமை மிக்க பாரம்பரியமான 'மடல்' கொடுக்கும் முறையே சாலச் சிறந்ததென்றனர். மற்றொரு சாராரோ கண்கள் பார்த்து  'அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள்'  முறையே தக்கது என்றனர். 'நீயா நானா' முடிவில் இறுதியில் 'கண்கள் பார்த்துக் காதல் சொல்வதே சிறந்தது' என்று தீர்ப்பாயிற்று. என் துரதிர்ஷ்டம் அப்பொழுது தான் ஆரம்பித்தது. மடல் சாரர்  வென்றிருந்தால் எவனோ எழுதித் தரும் கவிதை தெளிக்கப்பட்ட  கடிதத்தோடு(அல்லது e -mail) முடிந்திருக்கும்.
 
ஆனால்.... இப்பொழுது இவர்கள் 'சிக்கிட்டாண்டா ஒருத்தன்' ரீதியிலேயே என்னை நடத்தினர். நான் ஊருக்குச் சென்ற ஒரு வாரஇறுதியில், அறைவாசிகள் அனைவரும் சனிக்கிழமை இரவு சேர்ந்து  உட்கார்ந்து ஒரு பக்க அளவிலான ஒரு பத்தியை எழுதி முடித்தனர். நான் என் காதலை அவளிடம் பகிரும்  பொது சொல்ல வேண்டிய வரிகளே ஆகும் அது.  இதற்காகச் செலவளித்த ஆறு ஹாஃப்  சிக்கன் மற்றும் 3 ஃபுல் பீர்-க்கான செலவை ஏற்க வேண்டிய தார்மீகக் கடமை எனக்குண்டு என்றும் தேவைப் பட்டால் மற்றுமொரு சிட்டிங் உட்கார்ந்து அப்பத்தியை மெருகேற்ற வேண்டி இருக்குமென்றும்  தோளில் கைபோட்டு ஆதரவாய்ச் சொன்னான் ஒருவன்.
 
தினமும் காலை ஆறு மணிக்கு வேலைக்குச் செல்லும் அறைவாசியொருவன் என்னை 'ஆறு மணிக்கெலாம்' எழுப்பி விட்டான். இரண்டு நாட்கள் அதை நான் மனப்பாடம் செய்ய எனக்குத் தரப்பட்ட கெடு. அதனையொட்டியே இந்த காலை சுப்ரபாதம் எனக்கு. இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஒரு மாலையில் நண்பர்கள் அனைவரும் கூடி என்னை நடுவில் நிற்க வைத்து அப்பத்தியைக் கூறச் செய்தனர். அப்போது வந்து விழுந்த கருத்துக் குத்துகளே முதலில் நான் பட்டியலிட்டது.
 
எனக்கு மேலும் பயிற்சி வேண்டும்  என்று முடிவாயிற்று. ஆறு மணி  ஐந்து மணி ஆயிற்று. பயிற்சியாளராக தினமும் அறைவாசிகளில் ஒருவர் சுழற்சி முறையில் என்னைக் கவனிக்க வேண்டும் என்றும் வார இறுதியில், கூட்டுப் பயிற்சி அளிப்பதேன்றும் முடிவாயிற்று. அவ்வாறு நியமிக்கப் படும் பயிற்சியாளரின் காலை உணவு மற்றும் இன்ன பிற செலவுகளை  நான் ஏற்க வேண்டுமென்றும்  முன்னரே சொன்னது போல் பத்தியை மெருகேற்ற ஆகும் வாரஇறுதி 'சிட்டிங்' செலவை ஏற்பது என் கடமையென்றும் மற்றொரு முறை எனக்கு நினைவூட்டினர்.   
 
பதினான்கு சாதாரண பயிற்சி தினங்கள், மூன்று கூட்டுப்பயிற்சி மற்றும் இரண்டு 'சிட்டிங்' கடந்த பின்னர் ஒரு வழியாக அந்தச் சுபதினமும் வந்தது. நண்பர்கள் அனைவரும் கை குலுக்கி அலுவலகத்திற்கு என்னை அனுப்பி வைத்தனர். நான் போட வேண்டிய உடையை முன்னரே தீர்மானித்து இருந்ததால் மற்றுமொரு வாக்குவாதம் தவிர்க்கப் பட்டது. 
 
குறிப்பிட்ட நேரம் நெருங்குகையில் 'Confident-ஆ இருடா.. உன்னால முடியும்' 'ஆல் தி பெஸ்ட்'  போன்ற குறுஞ்செய்திகள் வேறு என் நடுக்கத்தைக் கூட்டியது. 
 
சம்பவ நேரமும் வந்தது. வழக்கம் போல் இருவரும் காப்பி குடிக்கக் கிளம்பினோம். ஆரம்பித்தேன்...
 
'ஸ்வேதா...நா... '  நான் முடிப்பதற்குள் அவள் ஆரம்பித்தாள்.
 
'உன் கிட்ட கொஞ்சம் பேசனும்... '
 
இது என்னுடைய வரி ஆயிற்றே என்ற சிந்தனையில் நான் இருக்கும்போதே மேலும் சொல்லி முடித்தாள்.
 
' நேரடியாவே சொல்றேன். உன்னை நான் விரும்பறேன். உன்னைக் கல்யாணம் செய்ய ஆசைப்படறேன்.உனக்கு ஓகே வா? '
 
எனக்கு சந்தோஷத்தை விட ஏனோ அந்தப் பத்தியை அவளிடம் சொல்ல முடியவில்லையே என்ற ஏக்கம் தான் அதிகம் வந்தது.  

Monday, May 17, 2010

அரவம் இல்லா புற்று

என் குரலில் துக்கம் மறந்து  
என் பார்வையில் தூக்கம் தொலைத்து
என் கண்களில் அடைக்கலம் தேடும்
காதலியொருத்திக் காத்துக்கிடக்க
 
அடகுவைத்த நகைகளையும்
அடக்கிவைத்த புதுவீட்டு ஆசையையும்
என் சம்பளத்தில் மீட்டெடுக்க
விழைவோர் வீட்டிலிருக்க
 
சிலருடன் பகிர்ந்த கனவுகளும்
சிலாகித்து என்னுள் விதைத்த கனவுகளும்
நீண்டுயர்ந்துப் பரவிக் கிடக்க
 
சீரணக் கோளாறாய் இருக்குமென
சிகச்சை பெற சென்றவிடத்தில்
 
அரவம் இல்லா புற்று ஒன்று
அரவமில்லாமல் வயிற்றில் அடர்கிறதென்றனர்
ஆண்டு ஒன்று ஆயுள் அதிகமாம்
எனக்கும் என் உணர்வுக்கும்.
 
கனவுகளை எண்ணிய  நான்,
இப்பொழுதோ
நாட்களையே எண்ணுகிறேன்.