அன்று பெய்த மழையின்
முன்னோட்டமாய் மின்னிய மின்னல்
உன் பெயரை வானில்
அச்சடித்துச் சென்றது என்றேன்!
உன் கவிதை பிரசுரித்த
பத்திரிகையின் பெயர் சொல்லி
கோயில் அர்ச்சனை செய்யலாமா
என்றென் ஐயம் பகர்ந்தேன்!
அலுவல் நிமித்தம் நீயெனைப் பிரிந்த
ஆறு நாட்களும் நான் வாங்கிய
புத்தகத்திலிருந்த பாம்பு உயிர்பெற்று
எனை மிரட்டியதையும்
புகைப்படத்திலிருந்த நீ உயிர்த்தெழுந்து
அதை விரட்டி எனைக் காத்ததையும்
சொன்னேன் என் தோழிகளிடம்!
இவற்றை
எழுத யத்தனிக்கும் பொழுதெலாம்
என் காகித ஓடையில்
என் பேனா விதைத்த வார்த்தை மீன் குஞ்சுகள்
நீந்த ஆரம்பித்து துள்ள ஆரம்பிக்கின்றன.
அதை ரசித்தபடியே கடலில் சேர்த்துவிடுகிறேன்!
சொற்களின் சேர்க்கை பிடிபடாததால்
உளறுகிறேன் என்றெண்ணி
அடைத்து விட்டார்கள்
மனநலக் காப்பகத்தில்।
இதையெலாம்
கவித்துவமாய் எழுதத் தெரிந்திருந்தால்
'கவிஞர்' பட்டம் தந்திருப்பார்களோ?
1 comments:
nallaayirukku..
Post a Comment