Tuesday, April 28, 2009

Inspiration from Vairamuthu's 'Duet' Lyrics

இமை பூட்டும் என் கருவிழியில் சிறைபட்டவளும் நீ தான்

இமை கிழித்து நீர் வழி வெளி வந்தவளும் நீ தான்


பெரும் ஓவியங்கள் தோற்றிடும் பேரழகும் நீ தான்

நெடுந் துயரதில் எனை ஆழ்த்தியவளும் நீ தான்

சங்கக் கவிகளை உயிர்த்தெழச் செய்தவளும் நீ தான்

சகமனிதர்களைப் புன்னகையால் கொன்றவளும் நீ தான்


பெண்ணின் இலக்கணம் வரைந்தவளும் நீ தான்

பிரிவின் வலி நெஞ்சில் குத்தியவளும் நீ தான்


உடல் தின்னும் தீயைச் சுட்டவளும் நீ தான்

உயிர் போக்கும் அமிலத்தைச் சுரந்தவளும் நீ தான்


காதலின் அரிச்சுவடி எனக்குத் தந்தவளும் நீ தான்

காலனின் வருகை வழி காட்டியவளும் நீ தான்


என் கவிதைக்குக் கருப்பொருளாய் இருந்தவளும் நீ தான்

என் கண்ணீரின் காரணியாய் இருப்பவளும் நீ தான்।


(An inspiration from Vairamuthu's 'Duet' Lyrics )

நான் | நீ | காதல்

நான் என்பது நீயாக

நீ என்பது நானாக

இருவரும் நாமானோம்.

பிறிதொரு ஊடலில்

நாம் என்பது நானாக

நீ என்பது நீயாகவேயிருக்க

நானோ இன்னும்

நீயாகவே உள்ளேன்!

வாழை நடும் வேளை

உன் கண்ணிரண்டு கொண்டு

நெருங்கினால் வாள் வீசுகிறாய்

மறுகிச் சென்றால் அம்பு தொடுக்கிறாய்।


கன்னியுன் போர் யுக்தியில்

சல்லியாய் நொருங்குகிறது மனம்.

சமாதானக் கொடி நீட்டுகிறேன்

சாகும் வரை உன்னடிமையென

சாசனம் தருகிறேன்.

வாளையும் வில்லையும் வீசிவிட்டு

உன் வீட்டில் வாழை நடச் செய்!

Monday, April 27, 2009

அவள் மனம் -2

அன்று பெய்த மழையின்

முன்னோட்டமாய் மின்னிய மின்னல்

உன் பெயரை வானில்

அச்சடித்துச் சென்றது என்றேன்!


உன் கவிதை பிரசுரித்த

பத்திரிகையின் பெயர் சொல்லி

கோயில் அர்ச்சனை செய்யலாமா

என்றென் ஐயம் பகர்ந்தேன்!


அலுவல் நிமித்தம் நீயெனைப் பிரிந்த

ஆறு நாட்களும் நான் வாங்கிய

புத்தகத்திலிருந்த பாம்பு உயிர்பெற்று

எனை மிரட்டியதையும்

புகைப்படத்திலிருந்த நீ உயிர்த்தெழுந்து

அதை விரட்டி எனைக் காத்ததையும்

சொன்னேன் என் தோழிகளிடம்!


இவற்றை

எழுத யத்தனிக்கும் பொழுதெலாம்

என் காகித ஓடையில்

என் பேனா விதைத்த வார்த்தை மீன் குஞ்சுகள்

நீந்த ஆரம்பித்து துள்ள ஆரம்பிக்கின்றன.

அதை ரசித்தபடியே கடலில் சேர்த்துவிடுகிறேன்!


சொற்களின் சேர்க்கை பிடிபடாததால்

உளறுகிறேன் என்றெண்ணி

அடைத்து விட்டார்கள்

மனநலக் காப்பகத்தில்।


இதையெலாம்

கவித்துவமாய் எழுதத் தெரிந்திருந்தால்

'கவிஞர்' பட்டம் தந்திருப்பார்களோ?

அவள் மனம் -1

உன்னோடு பின்னமர்ந்து

வண்டியில் செல்லும்போதோ

எனக்கான புடவையெடுக்க

கடையில் சுற்றும்போதோ

எனைச் சீண்டுவதற்காக நீ

சுட்டிக் காட்டும் அழகியப் பெண்களை

நான் பெரிதாக எடுத்ததில்லை।

'உனக்கு நானே அதிகம்' என்று

உன் வாயடைப்பேன்।

இருப்பினும்,

மனதின் ஏதோ ஒரு மூலையில்

பொறாமைத்தீ பற்றிக் கொள்வதைத்

தவிர்க்க முடியவில்லை!

கைப்பேசி

காற்றுக் குதிரையில்
அந்தி சாயும் வேளையில்
பவனி வரும்
உன் மெஸ்மரிஸ குரலில்
மிதக்கும் வர்ணனைகளைக்
கேட்பதற்காகவே வாங்கியிருக்கிறேன்
வானொலி வசதி கொண்ட
ஒரு புதிய கைப்பேசியை!

Saturday, January 10, 2009

சத்யா குடிச்சிருக்கியா?’

 

'ம்ம்...கொஞ்சம் தான் மது. ஒரு ரெண்டு சிப். அவ்ளோதான்'

 

மதுவிற்கு கோபம் தலைக்கேறியது. திருமணத்திற்கு முன்பே மதுவிடம் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது, "நட்சத்திர ஹோட்டலில் வேலையில் இருந்தாலும் சத்யா குடிப்பதில்லை, புகைப்பதில்லை" என்று.

 

மதுவின் கண்களை நேர் கொண்டு காண முடியவில்லை சத்யாவிற்கு.

 

'இல்லை மது... இன்னைக்கு ஒரு க்ளையண்ட் என்ன குடிக்கச் சொல்லி ரொம்ப வற்புறுத்தினார். நான் இப்போலாம் குடிப்பதில்லைனு எவ்வளவவோ சொல்லிப் பார்த்தேன்... அவர் கேட்கலை. வேற வழி இல்லாம கொஞ்சம் குடிச்சேன் அவ்ளோதான்'.

 

மதுவிற்கு கோபம் தணிந்ததாய்த் தெரியவில்லை. சத்யா தொடர்ந்து,

 

'புரிஞ்சிக்கோ மது.... நான் வேணும்னு குடிக்கல. இனிமே கண்டிப்பா குடிக்க மாட்டேன்....இது சத்தியம்'.

 

திருமணமான இந்த ஏழு மாதங்களில் சத்யா இந்த அளவு கலங்கி மது பார்த்ததில்லை.

 

சத்யா... நீ என்ன சமாதானம் சொன்னாலும் நீ செஞ்சது தப்புதான். நல்ல வேளை இன்னைக்கு அம்மா ஊர்ல இல்லை. மருமகள் குடிச்சிட்டு வீட்டுக்கு வர்ரது அவங்களுக்குத் தெரிஞ்சா எவ்வளவு கஷ்டப்படுவாங்க. இனிமேலாவது கவனமா இருந்துக்கோ'”

 

தலை அசைத்தவாறு உடை மாற்றச் சென்றாள் சத்யா என்ற சத்யப்பிரியா. அவளைப் புதிராய்ப் பார்த்தான் மது என்ற மது சூதனன்.

 

என்னை நீங்குவது

உன் உரிமையெனில்

என்னுள் உனை

நீக்கமறச் செய்வது

என் இருத்தலின் ஆதாரம்.

கனவுகளை நான்

தொலைத்துவிட்டதால்

நினைவுகளை விட்டு நான்

தொலைய நினைக்கிறேன்.

தும்மலுக்கு நன்றி.

தும்மலின் முடிவில்

அன்று நான்

அனிச்சையாய் கூறிய 'அம்மா',

நினைவூட்டியது எனக்கு

மறுநாள் அவளுடைய

பத்தாம் ஆண்டு திதி என்று.

 

தும்மிய பின் மெளனம் காக்கும்

என் பையனிடம்

''அம்மா' 'அப்பா' சொல்லிப் பழகு'

என்கிறேன் சில நாட்களாய்.

தும்மலுக்கு நன்றி.

Friday, January 2, 2009

கூசாமல் எழுதுகிறேன்

தொல்காப்பியம் தொட்டதில்லை

பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்

பள்ளிச் செய்யுளோடு சரி

கணக்குப் போட்டால் பத்தைத் தாண்டாது

நானறிந்த குறட்பா எண்ணிக்கை

பாரதியும் சரி அவன் தாசனும் சரி

நான்கைந்து வரிகள் அதிகபட்சம்

பாவகை தமிழில் பலவிருந்தும்

தேர்ச்சி ஒன்றிலும் இல்லை

இருப்பினும்...

கூசாமல் எழுதுகிறேன்

'புதுக்கவிதை' என்ற போர்வையில்

அதை வலைப்பதிவும் செய்கிறேன்

யாரென்ன செய்வரென்ற தைரியத்தில்.

மாயத்திரை

திறந்திருந்தால் உள்ளதையும்

மூடியிருந்தால் உள்ளத்தையும்

திரையிடுகிறது மூளையில்

இமையெனும் மாயத்திரை!

தங்கத் தட்டும் வெள்ளித் தட்டும்

மாறி மாறி மிதக்கின்றது

குளத்தில் சூரியனும் சந்திரனும்।

நீ விட்டெறிந்த கல்லால்
கலங்கியது முகம்
தண்ணீரில் என் பிம்பம்.

கனவுக் கோட்டை

முதல் மாத சம்பளத்தில்
கட்டிய கனவுக் கோட்டை
நொருங்கியது முழுவதுமாய்.
பேருந்தில் நானும்
என் கிழிந்த பையும்.