Saturday, August 16, 2008

தீண்டாமை

சிலர் பிறக்கும் போதே தீண்டப்படாதவர்களாய்ப் பிறக்கின்றனர்.
நாங்களோ வளர்இளம்பருவத்தில் தீண்டப்படாதவர்களாய் ஆகின்றோம்
அல்லது ஆக்கப் படுகின்றோம்.

விரும்பி ஏற்பதில்லை எங்களில் யாரும்...
அரும்பு மீசை தொடங்கும் பருவம்
ஹார்மோனின் தப்புத் தாளங்களில் அபஸ்வரமாய் நாங்கள்
அவனா அவளா உலகத்தில் 'அது'வாகவே வாழ்கிறோம்- இறுதிவரை

'தான் யார், ஏன் பிறந்தோம்?' என்ற தேடல்
ஞாநிகளுக்கும் முனிகளுக்குமானது மட்டுமல்ல
எங்களுக்கும் ஆனது தான்.
அவர்கள் விருப்பத்தினால் நாங்கள் நிர்பந்தத்தினால்!

'டேய் அங்கு பாரு, அலிடா!' சொல்பவராகட்டும்
'ஷிட்! தேட்ஸ் எ ப்லட்டி ட்ரான்ஸ்ஜெண்டர்' விழிப்பவராகட்டும்
வார்த்தைகளும் மொழிகளும் மட்டுமே வேறுபடுகின்றன
நாங்கள் எப்பொழுதும் 'அது' 'இட்' தான்...

நாங்கள் தீண்டப்படாதவர்கள் சரி....
எங்கள் தீட்டிற்கு பரிகாரமே இல்லையா?
உயிர் விடுதல் தவிர...
விலங்குகளுக்கு கூட கருணை காட்டும் பக்குவம் உள்ளது
உங்களில் பலருக்கு... அது ஏன் நாங்கள் என்று வரும்போது
வற்றி விடுகின்றது மனித நேயம்?
ஒரு வேளை மனிதக் கூட்டத்தில் எங்களைச் சேர்க்கவில்லையோ?
நம்புங்கள் நாங்களும் மனிதர்கள் தான்...
இரத்தமும் சதையும் ஆனது தான் எங்கள் இதயம்
எங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு- உங்களைப் போல!

0 comments: