Saturday, August 16, 2008

சித்தாந்தம்


சீருடை தவிர்த்து பேருந்தில் ஏறி அங்குச் சென்றேன். அந்த செக்போஸ்ட்டில் இறங்கி சுமார் நூறு அடி நடந்து காத்திருந்தேன். மோட்டார் பைக் ஒன்றில் சலிம் வந்தான். சென்ற முறை பார்த்ததிலிருந்து நிறையவே மாறியிருந்தான். பேச ஆரம்பித்தான்...


'சார் அந்த இயக்கத்தில் ஆள் சேர்க்கும் ஒரு மீடியேட்டர் இந்த ஊரில் தான் உள்ளான். நான் எப்படியும் ஒரு இரண்டு மாதங்களில் அவனது நம்பிக்கையைப் பெற்று இயக்கத்தில் சேர்ந்து விடுவேன். பின்னர் நம் ஏற்பாட்டின்படி ஒரு நன்னாளில் விஷயங்கள் சேகரித்துக் கொண்டு உங்களைப் பார்க்க வருகிறேன்'


'ம்ம்...தெளிவாகவேப் பேசுகிறாய். இந்தப் புத்தகங்களை வைத்துக் கொள். அவர்களிடம் பேசும்போது அவர்களின் சித்தாந்தங்கள் தெரிந்திருப்பது அவசியம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவுக்குள் இதனைப் படித்து முடி. அவர்களிடம் அதிகம் நெருங்க இது உதவும். இனி நாம் சந்திப்பது வேண்டாம். நம்பிக்கைப் பெற்று இயக்கத்தில் சேரும் முன் என்னிடம் ஒருமுறை தொலைப்பேசியில் பேசிவிடு'. கிளம்பினேன்...


இரண்டு மாதம் கழித்து, ஒரு மாலை வேளையில் என் அலைபேசி அலறியது.. புது எண்.


'ஹலோ!'. சலிம் தான். கொஞ்சம் பதற்றத்தோடு பேசுவதுபோல் இருந்தது.


'சார் என்னை மன்னிச்சிடுங்க. அவர்களின் சித்தாந்தங்களும் கொள்கைகளும் எனக்குச் சரியாகவே படுகின்றன. அவர்கள் நிலையில் ஆயுதம் ஏந்துவதிலும் தவறில்லை. நீங்கள் கூறியது போல் அவர்களிடம் சேரப் போகிறேன் - ஆனால் உண்மையாக'


'ஹலோ.... சலிம்! சலிம்!' அவன் தொடர்பில் இல்லை.

0 comments: