Monday, August 10, 2009

தீவிரவாத ரயில் குண்டு வெடிப்பில்
தூக்கியெறியப் பட்டபோது
இவைகள் சேர்ந்தன.

பல காலமாய் பிரிந்திருந்த
அந்த இரு தண்டவாளங்களும்

விவாகரத்துக் கோரி விண்ணப்பத்திருந்த
அந்தக் கணவன் மனைவி சடலங்களும்.

Friday, August 7, 2009

ன் திருமண அழைப்பிதழ்  தர
உன் இல்லம் வந்த போதுதான் 
உன் காதல் எனக்குப் புரிந்தது.
நீ தந்தத் தேநீர் 
சற்றே உப்பு கரித்திருந்தது. 

Thursday, August 6, 2009

தோல்விகள் கட்டியணைத்து
வெற்றிகள் எக்கி நின்று
எகத்தாளம் செய்தன முன்பு.
உன் வருகைக்குப் பின்
தோல்விகள் என்னிடம்
தோற்றுப் போய்விடுகின்றன.
வெற்றிகள் நிபந்தனை அற்ற
நிரந்தரக் கூட்டணி வைக்கின்றன.
நம்பிக்கையே!...
என்னுள் நீ வந்தமைக்கு நன்றி!

ந்த நால்வர் அணி
தலைவரை இரண்டு துண்டுகளாய்
உடைத்துச் சென்றது.
மீண்டும் தலைவரை
மற்றொரு இடத்தில்
கட்-அவுட் ஆக
சிரிக்க வைக்க.

Tuesday, August 4, 2009

கம் கடிக்கும் பழக்கத்திலிருந்து
என்னை மீட்க எண்ணி
உன் உதட்டுச் சாயத்தை
என் நகங்களில் பூசிவிட்டாய்.

கை சூப்பும் குழந்தையின் விரல்களில்
வேப்ப எண்ணை தடவி விடுவது போல்.

ஆனால்...???

நிழல் நண்பன்....



கல் முழுதும் என்னோடு
சுற்றித் திரியும் நண்பனவன்
இரவானதும் மறைந்து விடுகிறான்.
அவனுக்கும் மனைவியொருத்திக்
காத்திருப்பாள் போல।
* * * *

வெவ்வேறு வண்ணத்தில்
நான் ஆடை அணிந்தாலும்,
என் நிழலவனுக்கோ
எப்போதும் கருப்புச் சட்டை தான்.

தெரு முக்கில் உள்ள
பெரியார் சிலையை
நான் கடக்கும் போதெலாம்
சாஷ்டாங்கமாய் அவர் கால்களில்
விழுகிறான் எப்போதும்.

காத்திருப்பு


னக்காகக் காத்திருக்கும்,
ஒரு மணி நேரத்திற்குள்
நான்கைந்து அடிகள்
வளர்ந்து விட்டேன்.
மாலை நேர வெயிலில்,
என் நிழல் மூலம்.

மன அமைதி

பொருளாதாரச் சரிவு
ஆட்குறைப்பு
அலுவலகக் கெடுபுடி
தலை மேல் கத்தி,
எப்போதும்.
மருத்துவரின் மாத்திரையும்
சுவாமிஜியின் தியானமும்
தராத மன அமைதியை,
தொட்டிலில் தூங்கும்
என் குழந்தையின்
இரண்டு நிமிட கனவுச் சிரிப்பு
தந்து விடுகிறது.

ஆறாம் அறிவு

ரண் மேல் ஏறுவதாகட்டும்,
மரம் விட்டு மரம் தாவுவதாகட்டும்,
ஹாஸ்ய சேட்டைகள் செய்வதாகட்டும்,
கிராமத்துக் குழந்தைகள் யாவரும்
நம் மூதாதையரை நினைவூட்டி
டார்வினை மெய்ப்படுத்தவேச் செய்கின்றனர்.
பெரியவர்களான நாம்தாம்
சற்று அந்நியப்பட்டு விடுகிறோம்,
ஆறாம் அறிவால்.

Sunday, July 26, 2009

கூகுல்-க்கும் கூட
உன்னைப் பற்றித்
தெரிந்திருக்கிறது.
"தேவதை கவிதைகள்"
என்று தேடினால்
முதல் பத்து முடிவுகளும்
நான் உன்னைப் பற்றி
என் வலைப்பூவில் எழுதிய
பதிவுகளைச் சுட்டுகின்றது.

வர்கள்
கனவுகள் விதைத்து,
குருதியும் கண்ணீரும்
தெளித்து வளர்த்தனர்.
அக்கனவுகள்
நினைவுகளாய் பூத்து
கனியாகும் என்று.
ஆனால் இன்று
அவர்கள் அறுவடை செய்வதோ
மீண்டும் கனவு மூட்டைகளை.

ம் காதலைப் பகிர்ந்து
நாம் இருவரும் மீண்டும்
புதிதாய்ப் பிறந்த அந்நாளை
ஏன் நம் இருவருக்கும் பொதுவான
பிறந்த நாளாய்க் கொண்டாடக் கூடாது?

ம் பிரிதலின்
கடைசிச் சந்திப்பில்
ஈரமாயின
உதடுகளும், கண்களும்.

சபதம்

ன் பாதத்தைத் தொட்ட
அந்தக் கடல் அலையின்
கர்வக் கூச்சல் கண்டு,
மற்றொரு அலை சபதம் செய்தது.
தன் உயிர் விட்டு
வான் சென்று
மழைத் துளியாய்
பூமி வந்தாயினும்
ஒரு நாள்
உன் நெற்றியை முத்தமிடுமென்று.

Sunday, June 28, 2009

மன்னிப்பு வேண்டி நிற்கிறேன்...

திருடுவதே குற்றமெனும் போது,
களவாடப்படுவதே தெரியாமலிருக்கும்
உன்னிடமிருந்து கவர்வது
மிகப் பெரிய குற்றமே.

மன்னிப்பு வேண்டி நிற்கிறேன்.
உன்னிடமிருந்து
உனக்கே தெரியாமல்
சில கவிதைகள்
திருடியமைக்கு.
உன் கவிதை புத்தகத்திலிருந்து அல்ல.
உன் கண்களிலிருந்து.

இதுவும் திருட்டு தான்.
சற்று தாமதமானாலும்
புரிந்து கொண்டேன்
என் பிழையை.

மன்னித்து விடு.
மன்னித்து என்னை
கள்ளன் என்றாலும் சரி
கவிஞன் என்றாலும் சரி
கணவன் என்றாலும் சரி
ஏற்றுக் கொள்கிறேன்,
மனப்பூர்வமாய்.

Thursday, June 25, 2009

குறுஞ்செய்தி வாயிலாக ஒரு கதை

SMS

10.05 PM
இன்னுமா இன்ட்டர்வ்யூ முடியல? இப்ப எங்க இருக்கிற?

10.08
கொஞ்சம் நேரம் முன்னாடி தான் முடிஞ்சது... இப்ப சாப்டுட்டு இருக்கிறேன். பஸ் ஏறினதும் உனக்கு கால் பண்றேன்

10.09
'எப்படி பண்ணின இன்ட்டர்வ்யூ? பஸ் ஏறினதுக்கு அப்புறம் சொல்லு.

10.27
இன்ட்டர்வ்யூ நல்லா பண்ணியிருக்கிறேன்...பாக்கலாம். பஸ்-ல இடம் கிடச்சிருச்சு. இங்க படம் போட்ருக்காங்க.ரொம்ப சத்தமா இருக்கு. பேசினாலும் கேக்காது. அம்மா கிட்ட சொல்லிடு. நாளைக்குக் காலைல பாக்கலாம்.

10.29
சரி சொல்லிடறேன்... என்ன படம்? டேய் அண்ணா!பக்கத்துல எதும் அழகான பொண்ணு இருக்குதா?

10.33
ஆமா... பக்கத்துலயே ஒரு அழகான பொண்ணு. முன்னாடி இன்னொரு பொண்ணு. உனக்கு இதுல எந்த பொண்ணு அண்ணியா வேணும் சொல்லு? நாளைக்கு காலைல
வரும்போது கூட்டிட்டு வந்துடறேன். ஏதோ ஒரு சரத்குமார் படம். பேர்லாம் தெரியல.

10.35
உதை வாங்காம வீடு வந்து சேரு. போனா போகுது...கொஞ்சம் சைட் வேணா அடிச்சிக்கோ :)

10.39
நீ வேற.. நான் சும்மா சொன்னேன்டி.. இங்க பஸ்ல ஒரு பொண்னு கூட இல்ல.... கிழடுகட்டைங்களா இருக்கு :( ...படமும் புடிக்கல. போர் அடிக்குது.

10.42
அப்ப நல்லா படுத்துத் தூங்கு... சொல்ல மறந்திட்டேன். பாக்யம் சித்தி இன்னைக்கு வந்திருந்தாங்க. உனக்கு ஏதொ பொண்னு பாத்து வெச்சிருக்காங்களாம். உனக்கு
வேலை கிடைச்சதும் கல்யாணம் தானாம் :)!

10.45
ஆமா.. சித்திக்கு வேற வேலை இல்ல. இப்பலாம் பண்ணிக்க முடியாது. முதல்ல உன் கல்யாணம்டி... ஒரு இரண்டு வருஷத்துக்கு அப்புறம் தான் என்னோடது எல்லாம்.

10.47
நானும் இப்பலாம் பண்ணிக்க முடியாது...சரி வேலை கிடைச்சா முதல் சம்பளத்துல எனக்கு என்ன வாங்கித் தருவ?

10.53
ஹலோ...'என்ன வாங்கித் தருவ'ன கேட்டதும் சத்தத்தையே காணும்?

10.56
டேய்...தூங்கிட்டியா? ம்ம்...நாளைக்குப் பாக்கலாம். குட் நைட்....


11.00
(மற்றொரு பேருந்திலிருந்து யாரோ ஒருவர் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்புகிறார்)

'மச்சான் இங்க ஒரு பஸ் பள்ளத்துல கவுந்து கிடக்குடா. நிறைய கூட்டம் கூடியிருக்கு. ஆனா எங்க பஸ் நிறுத்தாம வந்துட்டான். எப்படியும் அஞ்சாறு பேராவது
காலியாயிருப்பாங்கடா'