முன்பொருமுறை முயன்றது போல் ஓரிரு வரிகளில் கதை சொல்ல முயன்று பார்த்தேன் மறுபடியும். 'Science Fiction' கதைகளே எனக்குப் பெரும்பாலும் தோன்றுகிறது :-( .
Monday, August 31, 2009
ஒரு வரி, இரு வரிக் கதைகள் (2)
Labels: குட்டிக் கதை
Posted by Suresh K at 8/31/2009 04:05:00 PM 1 comments
எட்டு வீடுகளிருந்தும் எப்போதும்
நடுத்தெரு வெயில் மழை தான்
கட்-அவுட்டில் சிரிக்கும் தலைவருக்கு.
***
இறங்கிய பின்னும் இறங்க மறுக்கிறது
என்னுடைய கண்கள்.
பேருந்தினுள் நீ.
***
என் இதயத்திற்கான விலையை
அறியக் கண்டேன்
உன் புன்னகையில்.
***
நிலவில் வடை சுடும் பாட்டி
யாருக்காக இவ்வளவு காலம்
சுட்டுக்கொண்டே இருக்கிறாள்?
***
இந்தப்புறம் பாட்டி
நிலவின்
மறுபுறம்?
Labels: ஹைகூ போல்....
Posted by Suresh K at 8/31/2009 04:01:00 PM 1 comments
Friday, August 28, 2009
வியாபாரம்
'ஹலோ...'
'ஹலோ ரகுராமன்!'
இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.
'ஆனா...என்னோட பேரு எப்படி உனக்குத் தெரியும்?'
'நீங்க வந்ததுமே உங்க முகத்த படம் பிடிச்சேன். அதை வெச்சு இணையத்துல நுழைஞ்சு 'உலக மக்கள் தகவல்கள்' தளத்த ஹேக் (Hack) செஞ்சு உங்க பேர கண்டுபிடிச்சேன்'
'இவ்வளவு சீக்கிரமாவா? '
'ம்ம்...நம்ப முடியலையா?'
'குட்... உன்ன மாதிரி சிலர பாத்திருக்கிறேன்... ஆனா நீ ரொம்ப புத்திசாலியா இருக்குற'
'பாராட்டுக்கு மிக்க நன்றி ரகுராமன்'
'சரி நேரா விஷயத்துக்கு வரேன்... உன்ன இப்ப நான் எதுக்காக வாங்கிச் செல்லனும்? நறுக்குன்னு பதில் சொல்லு பாக்கலாம்'
'மூணு காரணங்கள் இருக்கு ரகுராமன்'
'ஓ... சரி வரிசையா சொல்லு'
'முதலாவது, என்னால பங்குச் சந்தைல அடுத்த நாள் நடக்கிற விஷயங்களை 75% சதவீதம் துல்லியமா முதல் நாளே கணிக்க முடியும்... அதனால உங்களால நிறைய சம்பாதிக்க முடியும். இரண்டாவது, இப்ப உங்க வீட்ல இருக்குற மத்த எல்லா இயந்திர மனிதர்களை விட என்னால திறமையா வீட்டு வேலைகள் செய்ய முடியும்'
'மூணாவது விஷயம்?'
'நீங்க வந்த உடன நாம ரெண்டு பேரும் கைகுலுக்கும் போது உங்களோட உள்ளங்கை ரேகைய படம்பிடுச்சு பதிவுசெஞ்சு வெச்சிருக்கேன். இவ்வளவு நேரம் நீங்க பேசினதுல இருந்து உங்க குரலையும் பதிவு செஞ்சிருகேன். உங்களுக்கே தெரியும்.. இந்த இரண்டையும் வெச்சே உங்களோட வங்கிக் கணக்கு உள்ள என்னால நுழைய முடியும். நீங்க இப்ப என்ன வாங்கலைன்னா அடுத்து வரப் போற என்னோட எஜமான் கிட்ட என்னோட விசுவாசத்த காமிப்பேன்'
மெல்லிய புன்முறுவல் செய்தபின் தொடர்ந்தது...
'இந்தக் காரணங்கள் போதுமா?'
ரகுராமன் திகைத்துப் போனான்.
[கி.பி. 2035-இல் 'இயந்திர மனிதன் விற்பனைக் கடை'யினுள் நடந்த?!(நடக்கவிருக்கிற) ஒரு உரையாடல் ]
Labels: குட்டிக் கதை
Posted by Suresh K at 8/28/2009 07:18:00 PM 5 comments
Friday, August 21, 2009
பிப்ரவரி 14
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 8/21/2009 01:42:00 PM 7 comments
ஏன்?
யாரோ என்னைக் கன்னத்தில் தட்டி எழுப்பினார்கள். கொஞ்சம் சிரமப்பட்டுதான் கண் திறந்துப் பார்த்தேன். டாக்டர் மற்றும் இரண்டு நர்ஸ்கள் நின்றிருந்தனர். வயிற்றிலிருந்துக் கசிந்த வலி எனக்கு அறுவை சிகிச்சை முடிந்துவிட்டதென்பதை என் மூளைக்குச் சொன்னது. இருந்தும் கேட்டேன்...
"டாக்டர்...சர்ஜரி முடிஞ்சிருச்சா?"
டாக்டர்க்கு நான் கேட்டதுப் புரிந்தோ அல்லது யூகித்தோ சரியான பதிலே சொன்னார்.
"முடிஞ்சிருச்சுப்பா..எதுவும் பிரச்சனை இல்லை. மூணு நாலு நாள் இங்க ஐ.சி.யூல இருக்க வேண்டி வரும். அப்புறம் உன்ன தனி ரூம்க்கு மாத்தலாம்".
"மணி என்ன டாக்டர்?"
"ஆறு ஆகுதுப்பா... ஒரு மணி நேரத்துல முடிச்சாச்சு"
"டாக்டர்..வலிக்குது...அம்மா அப்பா எங்க டாக்டர்?"
நர்ஸிடம் எனக்கு ஏற்கனவே ஏறிக் கொண்டிருந்த ட்ரிப்ஸ் பாட்டிலில் ஏதோ ஒரு மருந்தைக் கலக்கச் சொன்னார். இன்னொருவரை விட்டு என் பெற்றோரை அழைத்து வரச் செய்தார். என் அம்மாவும் அப்பாவும் என் கட்டில் அருகே வந்து ஏதோ பேசினர். பேசுகிறார்கள் என்று மட்டுமே தெரிய, வார்த்தைகளை உள் வாங்க முடியவில்லை. கண்கள் இருட்ட...தூங்கினேனா மயங்கினேனா என்று எனக்குத் தெரியவில்லை.
நான் மீண்டும் முழித்துப் பார்த்த போது என் அருகில் யாருமில்லை. என் கட்டில் சுற்றிலும் இருட்டு மட்டுமே. எங்கோயிருந்து கொஞ்சம் வெளிச்சமும், இருவரின் பேச்சுக் குரலும் கேட்டது. பதட்டத்தில் எழ முயற்சி செய்தேன். சம்மட்டியால் யாரோ வயிற்றில் அடித்தது போல் ஒரு வலி...
'ஆ.....' என்று கத்தியே விட்டேன். அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறேன் என்ற பிரஞ்ஞை அப்பொழுதுதான் வந்தது.
ஒரு நர்ஸ் ஓடி வந்தார்...
'என்னப்பா...என்ன ஆச்சு?'
'மணி என்ன சிஸ்டர்?' .
'நாலு ஆகுதுப்பா...' . சிறுது இடைவேளி விட்டு அவரே தொடர்ந்தார் 'காலைல 4 மணி'.
அவர் காலை என்று சேர்த்துச் சொன்னதற்குக் காரணம் உண்டு. அந்த கட்டிலில் இருந்த படியே ஒருவரால் அது இரவா பகலா என்று நிச்சயம் யூகிக்க முடியாது. சூரிய ஒளி சிறிதுமின்றி முற்றிலும் குளிரூட்டப்பட்ட அறை அது. என் கட்டிலின் வலது புறமும் பின் புறமும் சுவர் தான். இடது புறம் சுமார் எட்டு அடி உயரத்தில் அலுமினியத்தால் ஆன ஒரு தடுப்பு. மிச்சமிருந்த அந்த நாலாவது புறத்திலும் அடர் பச்சை நிறத்திலான ஒரு துணி வைத்துத் தற்காலிகமாய் ஒரு சுவர் எழுப்பியிருந்தனர். டாக்டரோ நர்ஸோ என்னைப் பார்க்க வரும் போது மட்டும் அந்தச் சுவர் நகர்த்தப் படும்.
எனக்கு அடிவயிற்றின் வலியை விட இன்னும் இங்கு மூன்று நாட்கள் இருக்க வேண்டி உள்ளதே என்ற கவலை தான் பெரும் வலியாய் இருந்தது. உடம்பு சரியில்லாமல் சமயத்தில் வீட்டில் படுக்க நேரிடும் போது, சோர்வினைப் போக்க தொலைக்காட்சியும் புத்தகங்களும் பெரிதும் உதவி செய்யும். ஆனால், இங்கு ஐ.சி.யூ.விலோ புத்தகங்களுக்கு அனுமதி இல்லை. செல்போனுக்கும் தடா. கிருமிகள் பயமாம். முழித்திருக்கும் நேரமே கொடுமையாய் இருக்கும். ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரு முறை பெற்றோர்கள் வந்துப் பார்க்க அனுமதி. அதுவும் ஐந்து நிமிடங்கள் தான்.
முதல் நாள் பெரும்பாலும் தூக்கத்திலேயே கழிந்தது. அதற்கான பிரத்யேக மருந்து ஏதும் தந்தார்களா என்றுத் தெரியவில்லை. முழித்திருந்த நேரத்தில் நான் கிரகித்த விஷயங்கள் இவை தான். அந்தப் பெரிய அறையில் சில மருத்துவ உபகரணங்கள் போக மேலும் ஐந்து கட்டில்கள் போடப்படிருந்தன - மேலும் ஐந்து குட்டிச் சிறைச்சாலைகள்! அவற்றில் என் இடது புற கட்டில் மட்டுமே வெறுமையாய். எந்நேரமும் இரு நர்ஸ்கள் பணியில் இருந்தனர். நோயாளிகள் யாரேனும் லேசாக முனங்கினால் கூட என்னவென்று போய்ப் பார்ப்பார்கள்.
மாத்திரை கொடுத்து ஏறிக் கொண்டிருந்த டிரிப்ஸை நர்ஸ் நிறுத்தி, 'குட் நைட்' சொல்லிச் சென்றபோது வெற்றிகரமாய் முதல் நாள் முடிந்தது எனக்குத் தெரிந்தது.
தூங்க ஆரம்பித்த நேரம் ஏதோ சத்தம் கேட்டு முழுதாய் விழித்தேன். புதிதாய் யாரோ ஒரு நோயாளி வந்திருக்கிறார் போலும். சீஃப் டாக்டர் குரலுடன் மற்றொரு டாக்டர் மற்றும் மூன்று நர்ஸ்களின் குரல்களும் கேட்டன. எதோ பதட்டமான விஷயம் என்பது மட்டும் அப்போது எனக்குப் புரிந்தது.
'என்ன சிஸ்டர் நீங்களே இப்படிப் பண்ணலாமா? ' , சீஃப் டாக்டர் சற்றே கோபத்துடன் கேட்டார்.
போதையில் இருப்பவர் உளறுவது போல் ஒரு பெண்ணின் குரல் கேட்டது. அப்பெண்ணின் குரல் கொஞ்சம் சத்தமாகவே ஒலித்தது. நிச்சயம் என்னைப் போல் ஐ.சி.யூ.விலுள்ள மற்ற நான்கு நோயாளிகளும் விழித்திருப்பர்.
பேச்சுக் குரல்களை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பிதேன். அக்குரல்கள் எனக்குத் தெரிவித்த விஷயங்கள் இவை தான்:
அந்தப் புது நோயாளியின் பெயர் சாந்தி. இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை இந்த மருத்துவமனையில் தான் நர்சாக வேலை செய்திருக்கிறார். என்னக் காரணத்தினாலோ வேலையை விட்டுவிட்டு மற்றொரு மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார். திருமணம் ஆகவில்லை. உடன் அவர் தாய் மட்டுமே.
இப்போது தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். எதோ ஒரு மருந்து உட்கொண்டிருக்கிறார். அது மாத்திரையா அல்லது ஏதேனும் ஊசியா என்றுக் கூடத் தெரியவில்லை. அதைத் தெரிந்துக் கொள்ளும் முயற்சியில் தான் மற்றவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இப்போது பாதி மயக்கத்தில் இருக்கிறார்.
டாக்டர் ஏற்கனவே அவர் தாயுடன் இன்னொரு நர்சை அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அனுப்பியுள்ளார், ஏதேனும் மாத்திரைத் தாள், ஊசி மருந்துப் புட்டி கிடைக்கிறதா என்று. அந்தப் பெண்ணின் தாய் இன்னும் வரவில்லை போலும்.
'சிஸ்டர்! ப்ளீஸ்... கோ- ஆப்பரேட் பண்ணுங்க... என்ன மருந்து எடுத்துக்கிட்டீங்க?'
'சொல்ல மாட்டேன்... மாட்டேன்....மாட்டேன். என்ன சாக விடுங்க'
இன்னும் சுயநினைவுடன் தான் இருக்கிறார். ஆனால் வாய் குளறுகிறது.
'சிஸ்டர்... உங்க அம்மாவப் பாருங்க. அவங்கள கஷ்டபடுத்திட்டு நீங்க போகனுமா? என்ன மருந்துன்னு சொன்னாதான் ட்ரீட்மென்ட் கொடுக்க வசதியா இருக்கும்..உங்களுக்குத் தெரியாததா? '
'என்ன சாக விடுங்க...ப்ளீஸ்..கெஞ்சிக் கேட்டுக்கறேன்...என்ன விட்டுடுங்க ' அந்தப் பெண் அழ ஆரம்பித்தார்.
நேரம் ஆக ஆக அந்தப் பெண்ணின் உளறல் சத்தம் அதிகமானது. பேய் பிடித்ததுப் போல் கத்தினார். எல்லோரையும் மரியாதைக் குறைவாகப் பேச ஆரம்பித்தார். யாரையும் அவர் அருகில் கூட நெருங்க விடாது கூப்பாடு போட ஆரம்பித்தார்.
மற்ற நோயாளிகள் எல்லாம் நர்சுகளைக் கூப்பிட்டு என்னவென்று கேட்டனர். சீஃப் டாக்டர் ஒவ்வொரு படுக்கைக்கும் போய் ஒன்றுமில்லையென்றும் அவர்களைத் தூங்கச் சொல்லியும் சமாதானப் படுத்தினார்.
என்னுடைய திரைச் சீலையை விலக்கி எட்டிப் பார்த்தார். கொட்ட கொட்ட முழித்திருக்கும் என்னை ஆச்சர்யத்துடன் பார்த்தார்.எந்தக் குரலும் என்னிடமிருந்து வராததால், தூங்கிக் கொண்டிருப்பேன் என்றெண்ணி இருப்பார் போல.
'என்னப்பா தூங்கலியா? '
'இல்ல டாக்டர்... தூங்கினேன். இப்பதான்...'
'என்ன அந்த அம்மா போடற சத்தத்துல பயந்துட்டியா?'
'இல்...இல்லை டாக்டர்... பயப்படல...'
அவர் என் கண்களையே உற்றுப் பார்த்தார். நிச்சயமாக நான் சொன்னதை அவர் நம்பவில்லை. நானே தொடர்ந்தேன்..
'ஆனா ஒரு மாதிரியா இருக்கு டாக்டர்...'
நான் பதட்டத்தில் இருந்தது உண்மை. அந்த ஏ.சி குளிரிலும் வியர்த்துதான் போயிருந்தேன். அவர் என்னருகில் வந்து ஸ்டதஸ்கோப் உபயத்தில் வழக்கம் போல் இழுத்து மூச்சு விட வைத்து என்னமோ கூர்ந்துக் கவனித்தார். பி.பி அளவையும், நாடித் துடிப்பையும் சோதித்தார்.
என்னையே சில விநாடிகள் பார்த்தவாறு இருந்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை ...
'இப்ப உன்ன ரூம்க்கு மாத்திடறேன்... இன்னும் ஒரு அரை மணி நேரத்துல ரூம ரெடி பண்ணிட்டு உன்ன கூட்டிட்டு போகச் சொல்றேன்.'
ஏன் மாற்றச் சொன்னார் என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அந்தப் பெண் தான் காரணம். இப்பொது டாக்டரின் செல்போன் ஒலித்தது. 'ஹலோ' சொல்லிக் கொண்டே என் திரைச் சீலையை மீண்டும் மூடிவிட்டு மறைந்தார். அநேகமாக இந்தப் பெண்ணின் வீட்டிலிருந்து தான் அழைப்பு வந்திருக்கும்.
அந்தப் பெண்ணின் சத்தம் இப்போது வெகுவாகக் குறைந்திருந்தது. களைத்திருப்பார் போல. டாக்டர் இப்போது மற்றவர்களிடம் ஏதோ வேகமாய் சொல்லிக் கொண்டிருந்தார். மற்றவர்கள் பரபரப்பாயினர். என் இடப்புறக் கட்டிலில் அந்தப் பெண் கிடத்தப்படும் சத்தம் கேட்டது. அந்தப் பெண்ணிடம் இருந்து எந்தச் சத்தமும் இல்லை. மயக்க ஊசியோ அல்லது வேறேதும் மருந்தோ தந்திருக்கலாம்.
என் சிந்தனை இதிலிருந்து விலகி இப்போது வெளியில் செல்வதிலயே லயித்திருந்தது. எனக்கு என் வலி, அந்தப் பெண்ணின் நினைவுகள் அனைத்தையும் மீறி நான் இந்தச் சிறைச்சாலையிலிருந்து இன்னும் சிறுது நேரத்தில் விடுதலை ஆகப் போகிறேன் என்பதே என் எண்ணத்தில் பிரதானமாய் இருந்தது.
சிறுது நேரத்தில்...
கட்டிலில் இருந்த என்னை, என் தந்தையும் ஒரு நர்சும் மெதுவாக சக்கர நாற்காலிக்கு இடம் மாற்றினார்கள். என்னை இந்தச் சிறையிலிருந்து மீட்ட அந்தப் பெண்ணைப் பார்க்க ஏனோ எனக்கு ஆவலாய் இருந்தது. என் தந்தை மெதுவாகத் தள்ள ஆரம்பிக்க, என் பார்வை முழுதும் அந்தப் பக்கத்துக் கட்டில் நோக்கியே இருந்தது. ஆனால் பச்சைத் திரைச்சீலையால் மூடப்பட்டிருந்த அந்த கட்டிலின் காலைக் கூட என்னால் பார்க்க முடியவில்லை.
அடுத்த வந்த நாட்கள் அந்த அறையில் தான். இங்கும் கட்டில்தானாயினும், என்னால் புத்தகம் படிக்க முடிந்தது, நண்பர்கள் உறவினர்களுடன் பேச முடிந்தது ஆறுதலாய் இருந்தது. சமயத்தில் தத்தித் தத்தி சன்னல் பக்கம் வந்து சாலையையும் பார்க்க முடிந்தது. ஆனாலும் அந்தப் பக்கத்துக் கட்டில் பெண்ணின் நினைவு அவ்வபோது வந்துப் போகும்.
அந்தப் பெண் குணமடைந்து மூன்று நாட்களில் டிச்சார்ஜ் ஆகிச் சென்று விட்டார் என்று மற்றொரு நர்ஸ் மூலம் தெரிய வந்தது
எப்போதும் பார்த்த வீடாயினும் அன்று நுழையும் போது ஏதோ சொர்க்கத்தில் நுழைவது போலிருந்தது. நடப்பதில் பெரிய சிரமம் இல்லையெனினும் மருத்துவரின் அறிவுரைப்படி, பெரும்பாலும் கட்டிலிலேயேக் கழித்தேன். தொலைக்காட்சி எனக்கு உற்றத் துணைவனாய் இருந்தது.
பத்து நாட்கள் கழித்து என் அம்மாவுடன் மீண்டும் மருத்துவமனை சென்றேன்.
வெளி நோயாளி பிரிவில் டோக்கன் வாங்கிக் காத்திருந்தோம். அவ்வழியே சென்ற பரிச்சயமான ஒரு நர்ஸ் என்னைப் பார்த்துப் புன்னைகைத்து என் பக்கம் வந்தார்.
'எப்படிப்பா இருக்கிற?'
'இப்ப ஒண்ணும் பிரச்னை இல்லை சிஸ்டர்'
என் அம்மா பக்கம் திருப்பிய அவர்,
'என்னம்மா வீட்ல என்ன செய்யறான்? இங்க இருக்கும் போது போரடிக்குது போரடிக்குதுனு சொல்லிட்டே இருப்பானே!'
'அங்க முழு நேரமும் டி-வி தான். சில சமயம் ஏதாவது படிச்சிட்டு இருப்பான். சிஸ்டர்! அந்த சாந்தி சிஸ்டர் எப்படி இருக்காங்க?'
நான் கேட்க நினைத்துத் தயங்கிய கேள்வியை என் அம்மா கேட்டே விட்டார்.
"அவங்க இப்ப இல்லம்மா.. இங்க அட்மிட் ஆன மூணாவது நாளே அவங்க டிச்சார்ஜ் ஆகி போய்ட்டாங்க... போகும் போது கூட நல்ல சிரிச்ச முகமாதான் போனாங்க... அப்படிப் பண்ணினதுக்கு ரொம்ப வருத்தப் பட்டாங்க என்கிட்ட. இனிமே இந்த மாதிரி பண்ணக் கூடாதுன்னு சத்தியம் வாங்கினேன்.ப்ச்...ஆனா என்ன நடந்ததோ தெரியல... என்ன காரணம்னு அவங்க அம்மாக்குக் கூட தெரியல. மறுபடியும் நாலு நாள் முன்னாடி ஒரு அட்டெம்ப்ட் பண்ணி இருக்கிறாங்க. இங்க தான் கொண்டு வந்தாங்க... ஆன வரும் போதே உயிர் இல்ல. " ...
அவர் சொல்லி முடிக்கும் போதே, அவர் கண்களில் நீர் கோர்த்திருந்தது. என் கண்களும் கலங்கியிருந்தன; இதுவரை முகம் பார்க்காத, எந்தச் சம்பந்தமும் இல்லாத அந்தப் பெண்ணுக்காக.
அவர் ஏன் சாவை மீண்டும் மீண்டும் தேடிப் போனார்?
Labels: குட்டிக் கதை
Posted by Suresh K at 8/21/2009 12:56:00 PM 2 comments
Tuesday, August 18, 2009
பிணம்
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 8/18/2009 01:17:00 PM 3 comments
Labels: காதல்
Posted by Suresh K at 8/18/2009 01:11:00 PM 0 comments
வார விடுமுறையில்
டவுன் வந்து
சினிமா பார்த்து
வெளியே வரும் போது
தினக்கூலி கண்ணனின்
பையில் பத்து ரூபாய் மட்டுமே.
நான்கு ரூபாய் பேருந்துப் பயணத்தைத் தவிர்த்து
ஒரு மணி நேரம் வெயிலில் நடந்து
வழியில் விசாரித்த நண்பனிடம்
உணவருந்தியதாய்ப் புழுகி
ஊர் வந்ததும்
பத்து ரூபாய்க்கு
டாப்-அப் செய்து
அவசரமாய்
நண்பர்களுக்கு ஃபார்வர்ட் செய்தான்.
நமீதா பற்றிய கிசுகிசுவை .
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 8/18/2009 01:01:00 PM 0 comments
Monday, August 17, 2009
ஒரு வேலையும் இன்றி
சும்மாவே சுற்றிக் கொண்டிருக்கின்றன
கடிகார முட்கள்
***ஒரு மணி நேரத்திற்கொருமுறை
இடம் பொருள் ஏவலறியாது முத்தப் பரிமாற்றம்
கடிகாரத்துக்குள்.
***
அவர் ஒருமுறை மிதித்ததில்
ஐம்பது பேர் தள்ளாடிப் போனார்கள்
பேருந்து ஓட்டுனர் அடித்த பிரேக்.
Labels: ஹைகூ போல்....
Posted by Suresh K at 8/17/2009 01:24:00 PM 4 comments
Friday, August 14, 2009
விடியல் ஆரம்பித்தது
கால்சென்டர் பணியில்
***
இவள் வீட்டு அடுப்பு எரிகிறது.
பீடிகள் உற்பத்தி இவள் விரல்களில்.
***
காலையில் இமைகள் திறந்தும்
ஒளி புகவில்லை உள்ளே
காற்றில் எதையோ தேடியபடியே கைகள்.
கூட்டாளி யார் யாரென்று
Swine flu பீதியால் :-)
Labels: ஹைகூ போல்....
Posted by Suresh K at 8/14/2009 12:12:00 AM 3 comments
ஓர் தூறல் வேளையில் தான்
உன் காதலை என்னுடன் பகிர்ந்தாய்
மற்றொரு மழை நாளில்
உன் பிரிதலை எனக்குச் சொன்னாய்.
இரண்டுத் தருணங்களிலுமே
என் சார்பாக அந்த வானமும்
நெடுங்கண்ணீர் சிந்தியமையால்,
என் கண்கள்
கண்ணீர் கசித்ததை
நீ அறிந்திருக்க நியாயமில்லை.
Labels: காதல்
Posted by Suresh K at 8/14/2009 12:10:00 AM 2 comments
Monday, August 10, 2009
ரயில் பயணம்
இரண்டு மாதம் முன்னரே
முன் பதிவு செய்து
குட்டித் தலையனையும்
சின்னப் போர்வையும்
மறவாமல் கொண்டு வந்து
என் படுக்கைக்குச் சென்றேன்.
அருகில்...
குறட்டையில் சுவாசிக்கும் இருவர்
சிவராத்திரி கச்சேரி நடத்தினர்
ஆர்ப்பாட்டமாய்...விடியவிடிய.
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 8/10/2009 02:28:00 PM 3 comments
பேருந்து நிலைய வாசலுக்கே
ஓடிச் சென்று
பேருந்தைத் துரத்தி
கூட்டத்தில் இடி பட்டு
ஒரு செருப்புப் பிய்ந்து
படியில் மிதி பட்டு ஏறி
ஒருவனின் கெட்ட வார்த்தை
அர்ச்சனைக் கேட்டு
மஞ்சள் பை இருக்கையில் வீசி
இடம்பிடித்து அமர்ந்ததும் தெரிந்தது,
பேருந்து மாறி ஏறியது.
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 8/10/2009 02:25:00 PM 1 comments
துள்ளிக் குதித்து விளையாடுகின்றன
கயிற்றில் கட்டப்பட்ட இரு ஆடுகள்.
கசாப்புக் கடைக்குப் பின்னால்.
***
மகளின் காதல் கடிதங்களைத்
தீயிட்டுக் கொளித்தினார் தந்தை.
சாதி அதில் குளிர் காய்ந்தது.
***
அவள் இவளைப் பார்த்துப்
பொறாமைப் பட்டாள் கல்யாண வீட்டில்
கவரிங் நகையெனத் தெரியாமல்.
Labels: ஹைகூ போல்....
Posted by Suresh K at 8/10/2009 02:19:00 PM 2 comments
தீவிரவாத ரயில் குண்டு வெடிப்பில்
தூக்கியெறியப் பட்டபோது
இவைகள் சேர்ந்தன.
பல காலமாய் பிரிந்திருந்த
அந்த இரு தண்டவாளங்களும்
விவாகரத்துக் கோரி விண்ணப்பத்திருந்த
அந்தக் கணவன் மனைவி சடலங்களும்.
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 8/10/2009 02:14:00 PM 6 comments
Friday, August 7, 2009
Labels: காதல்
Posted by Suresh K at 8/07/2009 12:05:00 AM 4 comments
Thursday, August 6, 2009
தோல்விகள் கட்டியணைத்து
வெற்றிகள் எக்கி நின்று
எகத்தாளம் செய்தன முன்பு.
உன் வருகைக்குப் பின்
தோல்விகள் என்னிடம்
தோற்றுப் போய்விடுகின்றன.
வெற்றிகள் நிபந்தனை அற்ற
நிரந்தரக் கூட்டணி வைக்கின்றன.
நம்பிக்கையே!...
என்னுள் நீ வந்தமைக்கு நன்றி!
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 8/06/2009 11:39:00 PM 1 comments
அந்த நால்வர் அணி
தலைவரை இரண்டு துண்டுகளாய்
உடைத்துச் சென்றது.
மீண்டும் தலைவரை
மற்றொரு இடத்தில்
கட்-அவுட் ஆக
சிரிக்க வைக்க.
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 8/06/2009 11:36:00 PM 0 comments
Tuesday, August 4, 2009
நகம் கடிக்கும் பழக்கத்திலிருந்து
என்னை மீட்க எண்ணி
உன் உதட்டுச் சாயத்தை
என் நகங்களில் பூசிவிட்டாய்.
கை சூப்பும் குழந்தையின் விரல்களில்
வேப்ப எண்ணை தடவி விடுவது போல்.
ஆனால்...???
Labels: காதல்
Posted by Suresh K at 8/04/2009 11:35:00 AM 1 comments
நிழல் நண்பன்....
சுற்றித் திரியும் நண்பனவன்
இரவானதும் மறைந்து விடுகிறான்.
அவனுக்கும் மனைவியொருத்திக்
காத்திருப்பாள் போல।
* * * *
வெவ்வேறு வண்ணத்தில்
நான் ஆடை அணிந்தாலும்,
என் நிழலவனுக்கோ
எப்போதும் கருப்புச் சட்டை தான்.
தெரு முக்கில் உள்ள
பெரியார் சிலையை
நான் கடக்கும் போதெலாம்
சாஷ்டாங்கமாய் அவர் கால்களில்
விழுகிறான் எப்போதும்.
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 8/04/2009 11:14:00 AM 2 comments
காத்திருப்பு
ஒரு மணி நேரத்திற்குள்
நான்கைந்து அடிகள்
வளர்ந்து விட்டேன்.
மாலை நேர வெயிலில்,
என் நிழல் மூலம்.
Labels: காதல்
Posted by Suresh K at 8/04/2009 11:12:00 AM 1 comments
மன அமைதி
பொருளாதாரச் சரிவு
ஆட்குறைப்பு
அலுவலகக் கெடுபுடி
தலை மேல் கத்தி,
எப்போதும்.
மருத்துவரின் மாத்திரையும்
சுவாமிஜியின் தியானமும்
தராத மன அமைதியை,
தொட்டிலில் தூங்கும்
என் குழந்தையின்
இரண்டு நிமிட கனவுச் சிரிப்பு
தந்து விடுகிறது.
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 8/04/2009 11:10:00 AM 3 comments
ஆறாம் அறிவு
பரண் மேல் ஏறுவதாகட்டும்,
மரம் விட்டு மரம் தாவுவதாகட்டும்,
ஹாஸ்ய சேட்டைகள் செய்வதாகட்டும்,
கிராமத்துக் குழந்தைகள் யாவரும்
நம் மூதாதையரை நினைவூட்டி
டார்வினை மெய்ப்படுத்தவேச் செய்கின்றனர்.
பெரியவர்களான நாம்தாம்
சற்று அந்நியப்பட்டு விடுகிறோம்,
ஆறாம் அறிவால்.
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 8/04/2009 11:05:00 AM 0 comments