Sunday, June 28, 2009

மன்னிப்பு வேண்டி நிற்கிறேன்...

திருடுவதே குற்றமெனும் போது,
களவாடப்படுவதே தெரியாமலிருக்கும்
உன்னிடமிருந்து கவர்வது
மிகப் பெரிய குற்றமே.

மன்னிப்பு வேண்டி நிற்கிறேன்.
உன்னிடமிருந்து
உனக்கே தெரியாமல்
சில கவிதைகள்
திருடியமைக்கு.
உன் கவிதை புத்தகத்திலிருந்து அல்ல.
உன் கண்களிலிருந்து.

இதுவும் திருட்டு தான்.
சற்று தாமதமானாலும்
புரிந்து கொண்டேன்
என் பிழையை.

மன்னித்து விடு.
மன்னித்து என்னை
கள்ளன் என்றாலும் சரி
கவிஞன் என்றாலும் சரி
கணவன் என்றாலும் சரி
ஏற்றுக் கொள்கிறேன்,
மனப்பூர்வமாய்.

Thursday, June 25, 2009

குறுஞ்செய்தி வாயிலாக ஒரு கதை

SMS

10.05 PM
இன்னுமா இன்ட்டர்வ்யூ முடியல? இப்ப எங்க இருக்கிற?

10.08
கொஞ்சம் நேரம் முன்னாடி தான் முடிஞ்சது... இப்ப சாப்டுட்டு இருக்கிறேன். பஸ் ஏறினதும் உனக்கு கால் பண்றேன்

10.09
'எப்படி பண்ணின இன்ட்டர்வ்யூ? பஸ் ஏறினதுக்கு அப்புறம் சொல்லு.

10.27
இன்ட்டர்வ்யூ நல்லா பண்ணியிருக்கிறேன்...பாக்கலாம். பஸ்-ல இடம் கிடச்சிருச்சு. இங்க படம் போட்ருக்காங்க.ரொம்ப சத்தமா இருக்கு. பேசினாலும் கேக்காது. அம்மா கிட்ட சொல்லிடு. நாளைக்குக் காலைல பாக்கலாம்.

10.29
சரி சொல்லிடறேன்... என்ன படம்? டேய் அண்ணா!பக்கத்துல எதும் அழகான பொண்ணு இருக்குதா?

10.33
ஆமா... பக்கத்துலயே ஒரு அழகான பொண்ணு. முன்னாடி இன்னொரு பொண்ணு. உனக்கு இதுல எந்த பொண்ணு அண்ணியா வேணும் சொல்லு? நாளைக்கு காலைல
வரும்போது கூட்டிட்டு வந்துடறேன். ஏதோ ஒரு சரத்குமார் படம். பேர்லாம் தெரியல.

10.35
உதை வாங்காம வீடு வந்து சேரு. போனா போகுது...கொஞ்சம் சைட் வேணா அடிச்சிக்கோ :)

10.39
நீ வேற.. நான் சும்மா சொன்னேன்டி.. இங்க பஸ்ல ஒரு பொண்னு கூட இல்ல.... கிழடுகட்டைங்களா இருக்கு :( ...படமும் புடிக்கல. போர் அடிக்குது.

10.42
அப்ப நல்லா படுத்துத் தூங்கு... சொல்ல மறந்திட்டேன். பாக்யம் சித்தி இன்னைக்கு வந்திருந்தாங்க. உனக்கு ஏதொ பொண்னு பாத்து வெச்சிருக்காங்களாம். உனக்கு
வேலை கிடைச்சதும் கல்யாணம் தானாம் :)!

10.45
ஆமா.. சித்திக்கு வேற வேலை இல்ல. இப்பலாம் பண்ணிக்க முடியாது. முதல்ல உன் கல்யாணம்டி... ஒரு இரண்டு வருஷத்துக்கு அப்புறம் தான் என்னோடது எல்லாம்.

10.47
நானும் இப்பலாம் பண்ணிக்க முடியாது...சரி வேலை கிடைச்சா முதல் சம்பளத்துல எனக்கு என்ன வாங்கித் தருவ?

10.53
ஹலோ...'என்ன வாங்கித் தருவ'ன கேட்டதும் சத்தத்தையே காணும்?

10.56
டேய்...தூங்கிட்டியா? ம்ம்...நாளைக்குப் பாக்கலாம். குட் நைட்....


11.00
(மற்றொரு பேருந்திலிருந்து யாரோ ஒருவர் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்புகிறார்)

'மச்சான் இங்க ஒரு பஸ் பள்ளத்துல கவுந்து கிடக்குடா. நிறைய கூட்டம் கூடியிருக்கு. ஆனா எங்க பஸ் நிறுத்தாம வந்துட்டான். எப்படியும் அஞ்சாறு பேராவது
காலியாயிருப்பாங்கடா'

Wednesday, June 24, 2009

தீர்ப்பு

என்னைப் பற்றிய
உன் கவிதைக்கும்,
உன்னைப் பற்றிய
என் கவிதைக்கும்,
சிறந்தது யாரென்ற
போட்டி வந்தது.

நம்மிடையேயான காதலையே
நடுவராய் ஏற்றனர் இருவரும்.
காதல் நடுவரோ கவிதைகள் படிக்க
அவகாசம் வேண்டுமென்று
மழை நாள் ஒன்றுக்குத்
தீர்ப்பைத் தள்ளி வைத்தார்.

தீர்ப்பு நாளும் வந்தது.
காதல் மன்றத்தில்
வாதியும் பிரதிவாதியும்
ஆவலாய் காத்திருக்க,
கம்பீர நடை பயின்று வந்தார்
காதல் நடுவர் அவர்கள்.
புன்னகையுடன் வாசித்தார் தீர்ப்பை...
கர்வம் பொங்க.

'இரு கட்சி கவிதைகளையும்
சாட்சியாய் கொண்டு வரும்
என் தீர்ப்பு யாதெனில்:
'இந்த எழுத்து கவிகளை விட
உணர்வு கவிதையான நானே,
அதாவது வாதி பிரதிவாதி
வியந்து பாடிய காதலே
சிறந்த கவிதை என்று தீர்ப்பளிக்கிறேன்!'

காதல் மன்றம் மகிழ்ச்சியில் பொங்க,
கூடியிருந்த காதலர்கள் ஆர்ப்பரிக்க,
உன் கவிதையும்
என் கவிதையும்
தலை தொங்கி வெளியேறியது.

Tuesday, June 23, 2009

முத்தம்

முத்தம் ஒன்று இட்டு விட்டு
வந்த திக்கில் சென்றுவிட்டாய்.
இட்ட சுவை பட்ட இடம்
உறைந்து போய் உள்ளது.
மல்லி மணம் காற்றில் சுற்றி
சித்தம் ஏறி பித்தம் கொளச் செய்கிறது.
உனக்கென்ன நீ அமைதியாய் இருப்பாய்...
புயல் சின்னம் என்னை அல்லவா
மையம் கொளச் செய்து விட்டாய்.

ஒரு கதை, இரு வேறு முடிவுகள்...

ராஜதுரை எம்.எல்.ஏ. அப்பொழுது தான் இரவு உணவிற்காக வீடு வந்திருந்தார். வந்தது தெரிந்தோ என்னவோ அவரது வீட்டு தொலைபேசி அலறியது . அழைப்பை எடுக்கச் சென்ற தன் மனைவியை சைகையால் அமர்த்திவிட்டு அவரே தொலைபேசி எடுத்தார்.

'ஹலோ....'

'.....' எதிர் முனையில் பதில் இல்லை.

'ஹலோ..யார்ங்க?'

கரகர குரலில் ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவரின் குரல் ஒலித்தது. 'நீ இது வரை பண்ணின அட்டூழியங்களுக்கு எல்லாம் பதில் சொல்ற காலம் வந்தாச்சு. இன்னும் இரண்டே நாள்ல உன் கதையை முடிக்கிறேன். சவால்... முடிஞ்சா உன்ன காப்பத்திக்கோ'.

தொலைபேசி துண்டிக்கப் பட்டது. ராஜதுரை ஒரு நிமிடம் சிலையாகிப் போனார். முகத்தின் திடீர் மாற்றம் கண்டு அவரது மனைவி குழம்பிப் போனார்.

'என்னங்க ஆச்சு? யார் ·போன்ல?'

'அ...அது ஒன்ணுமில்லை. ஏதோ ராங் கால்னு நினைக்கிறேன்'. இயல்பாக இருக்க முயன்று தோற்றுப் போனார்.

'ஏங்க நீங்க ரொம்பப் பதட்டப்படற மாதிரி தெரியுது. டாக்டர்ட்ட ஒரு நடை போய் பார்த்துட்டு வந்திடலாமா?'

'ஏய்...அதெலாம் வேண்டாம். ஒரு பிரச்சனையும் இல்ல. முதல்ல சாப்பாடு வையி'

மனைவியிடம் ஏதோ சமாளித்தாரே தவிர உள்ளே அவரது இதயம் சற்று அதிகமாகவே துடிக்க ஆரம்பித்தது. அந்தக் குரல் யாருடையதாய் இருக்கும் என்ற யோசனை ஒரு புறம். காவல் துறையிடம் இதைச் சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பம் மறுபுறம்... கடனே என்று மனைவி பரிமாரிய உணவை விழுங்க ஆரம்பித்தார்.

இக்கதையின் முடிவு இப்படி இருந்திருக்கலாம்

எங்கோ இருட்டில் இருவர்...

'டேய் என்னடா இப்படி செஞ்சிட்ட?'

'பின்ன என்னடா... எம்.எல்.ஏ ஆன இந்த நாலு வருஷத்துல நம்ம தொகுதிக்கு ஏதாவது செஞ்சிருப்பானா இந்த ஆளு? எப்படியும் பத்து இருபது கோடி சேத்திருப்பான். இப்ப என்னோட இந்த பொய்யால அவனுக்கு இன்னும் ரெண்டு நாள் சோறு தண்ணி இறங்காது... பயலுக்கு ஹார்ட் அட்டாக் வந்தாக் கூட ஆச்சர்ய படுறதுக்கில்ல... ஏதோ என்னால முடிஞ்சது ஒரு ரூபாய்ல'

'அவன் போலீஸ்கிட்ட போனா உன்ன கண்டுபிடிக்க மாட்டாங்களா?'

'மாட்டாங்கடா...இந்த ஒரு ரூபாய் காயின் ·போன வேணா கண்டுபிடிப்பாங்க. சரி நாம ரொம்ப நேரம் இங்க இருக்கக் கூடாது. கிளம்பலாம்'

இருட்டில் மறைந்தார்கள்.

இப்படியும் இருந்திருக்கலாம்...

'குட்டிமா! ·போன் கிட்ட இருந்து என்ன பண்ணிக்கிட்டிருக்க?' சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள் மரகதம், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஏதோவொரு தொடரின் சத்தத்தை மட்டும் கேட்டுக்கொண்டே.

அவளது மூன்று வயது குழந்தை பாபு, நல்ல பிள்ளையாக தொலைபேசியை வைத்துவிட்டு அம்மாவிடம் சென்றான்.

அவன் அம்மாவிற்கு தெரிந்திருக்க நியாயமில்லை...அவன் ஏதோ ஒரு எண்ணிற்கு அழைத்ததையும், தொலைபேசி வாயை தொலைக்காட்சி நோக்கி வைத்ததையும், அந்நேரம் தொடரின் நாயகன், வில்லனுக்கு சவால் விட்டதும்.

Monday, June 22, 2009

ஏக்கம்

கல்லூரி முடித்து வேலையின்றி,
கண்களில் குற்றவுணர்ச்சி தேக்கி
எவரேனும் எப்பணிக்கேனும்
அழைக்க மாட்டார்களாவென ஏங்கி,
சொந்த வீட்டிலோ உறவு வீட்டிலோ
அண்டிப் பிழைக்கும் நாட்களில்,
வைரமுத்து கூற்று போல்
காதலித்தால் மட்டுமல்ல,
வேலைக்கான காத்தலிலும்
தபால்காரன் தெய்வமாகிறான்.

ஒவ்வொரு நாளும்
அவன் தெருவைக் கடக்கையில்,
கண்களின் ஏக்கம்
துரத்திச் செல்லும் அவனை.
தீவிரபக்தன் சாமி ஊர்வலம்
பின்னோடுவது போல்.

என்றோ அவன் தரப்போகும்
அந்த நியமன உத்தரவிற்காக
காத்துக் கிடக்கும் மனது.
பிராசாதத்திற்கேங்கும்
கோயில் பிச்சைக்காரன் போல்.

Saturday, June 20, 2009

யாரேனும் சொல்லுங்களேன்...

எப்பொழுதும்
பழைய பாடல்களே விரும்பும் அவளிடம்,
புதுப்பாடல்கள் ஏதேனும்
கேட்கச் சொல்லுங்களேன்...

அவள் சாய்வு நாற்காலியில் உட்காரும் போது
எனக்கு சுகமாய் இருக்கும் என்பதையும்
அவள் வயிறு குலுங்கச் சிரிக்கும் போது
ஊஞ்சலாடுவது போலிருக்கும் என்பதையும்
சேர்த்தேச் சொல்லுங்கள்.

முடிந்தால்...
யாரேனும் அவளை
சாய்வு நாற்காலியில் உட்காரச் செய்து
புதுப்பாடல்கள் கேட்கச் செய்து
அதிகம் சிரிக்க வையுங்களேன்...

கருவறையிலிருந்து வெளி வந்தவுடன்
மறவாமல் நன்றி சொல்வேன் உங்களுக்கு!

Monday, June 15, 2009

ஆகாய மேடை

தோல்விகள் ஆசையாய் அணிவகுத்து
எனைத் தேடி வந்த
அந்நாளில்
ஆகாயத்தில் மேடையொன்று கட்டி
என் கனவுகளை அரங்கேற்றி மகிழ்ந்து
உற்சாகப் படுத்திய நீ
இன்று
என் கனவுகள் உயிர் பெற்று
பூமியில் அரங்கேறும் போது
ஆகாயத்தின் மேல் நின்று
கண்டு சிரிக்கிறாய்!

Saturday, May 30, 2009

வலைப்பூ ஆசை

இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.... (http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html)

அந்த வெள்ளி இரவில், எனக்கு ஒரு விசித்திர மின்னஞ்சல் வந்திருந்தது.
அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால், நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்து விட்டு சுமார் 11.30 மணி அளவில் எனது லேப்-டாப் திறந்து போது அதைக் கண்டேன்.

வழக்கமான ஏதோ ஒரு குப்பை (spam) என்றே முதலில் அதை நினைத்தேன. அனுப்புநர் முகவரி சற்றே வித்தியாசமாய் இருக்க அதைப் படிக்க ஆரம்பித்தேன். அந்த அஞ்சல் என்னை எதையும் வாங்கச் சொல்லவில்லை, எவ்வாறு இணையத்தில் பொருள் ஈட்டலாம் என்ற வகுப்பும் இல்லை; எனது வங்கி எண்ணையும் கேட்கவில்லை. ஒரு ஆர்வத்தில் rajblogs@hell-heaven.net என்ற அந்த முகவரிக்கு வெறும் 'வணக்கம்' மட்டும் சொல்லி ஒரு பதில் அஞ்சல் செய்தேன். அப்படியொரு முகவரியே இல்லையென்று எனக்கு பதில் வந்துவிட்டது.

பொதுவாகவே 'இதை உங்கள் பத்து நண்பர்களுக்கு அனுப்பினால் உங்கள் வாழ்வு செழிக்கும் இல்லையேல் இரத்தம் கக்கி சாவீர்கள்' என்கிற ரீதியில் வரும் மின்னஞ்சல்களை நான் மதிப்பதில்ல. ஆனால் இந்த முறை ஏனோ அவ்வாறு இருக்க முடியவில்லை.

அந்த மின்னஞ்சலில் இருந்தது இதுவே:

“ வணக்கம் அன்பரே! எனது பெயர் ராஜசேகரன்.31 வயதான நான் திருமண முறிவிற்குப் பின் தனியாகவே உள்ளேன். உங்களைப் போலவே தினமும் ஒரு மணி நேரமாயினும் இணையத்தில் உலா போகாவிட்டால் எனக்கு அன்றைய தினம் முடியாது. எனது முக்கியமான பொழுதுபோக்கே வலைப்பதிவுகளைப் (blogs) படிப்பதுதான்.

டைப் அடிக்க தெரிந்தவனெலாம் வலைப்பூவும் இணையதளமும் ஆரம்பிக்க, எனக்கும் அந்த ஆசை துளிர் விட்டது. சிறுவயதிலிருந்தே ஓரளவு கதைகள் எழுத வருமாதலால் அதைக் கொண்டே எனது வலைப்பதிவை அலங்கரிக்க நினைத்தேன். கதையின் கருவை முடிவு செய்து விட்டு எழுத ஆரம்பிக்கும் போது ஊசி குத்தியது போல் ஒரு வலி என் மார்பில் ஆரம்பித்தது. பொறுத்துக் கொண்டு என் லேப்-டாப்பில் டைப் செய்ய ஆரம்பித்தேன். ஒரு வரி தான்... அதற்குள் கண்கள் இருட்ட ஆரம்பித்து சுயநினைவை இழக்க ஆரம்பித்தேன்....

மறு நாள் இரவு போலீசார் வந்து எனது பிரேதத்தைக் கொண்டு சென்றனர். கடைசி வரை என்னால் என் எழுத்துக்களை இணையத்தில் இணைக்க முடியாமலேயே போய்விட்டது. நீங்கள் எனது கதையை முடித்து இணையத்தில் சேர்ப்பீர்களா? எனது ஆசையை நிறைவேற்றுவீர்களா?

நான் எழுதிய அந்த ஒரு வரி இது தான்: ....”

அந்த மின்னஞ்சலில் கடைசியாக அந்த ராஜ் ஆரம்பித்த கதையின் ஆரம்ப வரியும், 'அன்புடன் ராஜ்' என்றும் இருந்தது.

காசா பணமா ஒரு கதை தானே, முயற்சி செய்து பார்க்கலாம். நன்றாக வந்தால் என் வலைப்பூவில் பதிவிடலாம் இல்லையேல் நல்ல பிள்ளையாக அதை அழித்து விட்டு வேறு வேலை பார்க்கப் போகலாம் என்றெண்ணி, அந்த ஓர் வரியிலிருந்து ஏதேனும் கதை எழுத வாய்ப்புள்ளதா என்று சிந்திக்க ஆரம்பித்தேன். சுமார் 20 நிமிட யோசித்தலில் ஒரு கரு பிடிபட்டது. தூங்கும் முன்னரே எழுதி முடித்துவிடலாம் என்று முடிவு செய்து மணியைப் பார்த்தேன். சரியாக 12.01.

சுவற்றில் சாய்ந்து கொண்டு டைப் செய்ய ஆரம்பித்தேன. முதல் வரியை அடிக்கும் போதே... ஊசி குத்தியது போல் ஒரு வலி என் மார்பில் ஆரம்பித்தது. சமாளித்துக் கொண்டு அடுத்த வரி அடிக்க முயன்றேன்... ஆனால்...கண்கள் இருட்ட ஆரம்பித்து சுயநினைவை மெல்ல இழக்க ஆரம்பித்தேன்.....மறு நாள் காலை போலீசார் வந்து எனது பிரேதத்தைக் கொண்டு சென்றனர்.

ராஜ் ஆசையை நிறைவேற்றலாம் என்ற என் ஆசையும் நிராசையாய்ப் போனது. கடைசி வரை அந்தக் கதையை முடித்து இணையத்தில் இணைக்க முடியாமலேயே போய்விட்டதே!

ப்ளீஸ்...உங்களில் யாரேனும் இதை முயற்சி செய்து எங்கள் ஆசையை நிறைவேற்றுவீர்களா? ஆங்...சொல்ல மறந்து விட்டேனே, அந்தக் கதையின் முதல் வரி இதுதான்:

"அந்த வெள்ளி இரவில், எனக்கு ஒரு விசித்திர மின்னஞ்சல் வந்திருந்தது."

அன்புடன்
சுரேஷ்

Monday, May 25, 2009

ஒரு வரி, இரு வரிக் கதைகள்

சில ஆண்டுகளுக்கு முன்னர் சுஜாதா அவர்கள் 'ஆனந்த விகடனில்' தமிழில் ஓரிரு வரிகளில் கதை சொல்லும் முறை பற்றி குறிப்பிட்டிருந்தார். அவை ஒரு முழு நீளக் கதை போல் உணர்வுகளை, காட்சிகளை வெளிப்படுத்தாவிடினும் ஒரு சிறு தாக்கத்தையேனும் ஏற்படுத்தக் கூடியது.அப்போது வாசகர்களுக்குப் போட்டிகள் கூட நடத்தினார்

 திகில், நகைச்சுவை போன்ற சில தலைப்புகளில் உதாரணங்கள் தந்திருந்தார். அவர் அது வரை படித்ததில் சிறந்தது என்று குறிப்பிடிருந்தது,

உலகின் கடைசி மனிதன் அறையினுள் இருக்க, கதவு தட்டப்பட்டது  

 

தலைப்பைத் தவிர்த்து, ஒன்று அல்லது இரு வரிகளில் கதை சொல்ல நானும் முயற்சி செய்தேன். அவற்றுள் சில இங்கே...:)

 

தலைப்பு: மனநல மருத்துவரின் குழப்பம்

'டாக்டர், இவன் தான் நான் கூட்டி வந்த பேஷண்ட்'.

'ஐயோ! பொய் சொல்றான் டாக்டர்.'

 

தலைப்பு: தீபாவளி

முன் வாசலில் பட்டாசு ராக்கெட் கொழுத்தி விட்டு வீட்டினுள் நுழைந்தோம்.

கொல்லைபுறம் வைக்கோல் போரில் பற்றி எரியும் தீயின் வெப்பம் தாங்காமல் அலறிக் கொண்டிருந்தது எங்கள் பசு.

 

தலைப்பு: 'நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்

 இறந்து போன தன் காதலி தந்த பிறந்த நாள் வாழ்த்து அட்டையைக் கலக்கத்துடன் பார்த்தார், மறு நாள் தன் நூறாவது பிறந்த நாள் விழா கொண்டாடப் போகும் பாலு தாத்தா.

  

ஓர் உயிரைக் கொடுத்து,  ஓர் உயிரின் அழிவிற்கு வித்திட்டான் லட்சுமியின் எய்ட்ஸ் கணவன். (தலைப்பின்றி)

Thursday, May 21, 2009

கவிதைத் திருட்டு

நான் கவிதை எழுதுவேனென
நண்பர்கள் சொன்னதை நம்பாமல்
என்னிடமே உன் ஐயம் பகர்ந்தாய்.
உனக்காக ஒரு கவிதை கேட்டாய்.

கால் மணி அவகாசம் கேட்டு
திரும்பி வந்து நான் தந்த
வண்ணத்தாள் சுற்றிய அப்பொருளைப்
புரியாமல் நீ பார்த்த ஒவ்வொரு நொடியும்
உன் ஒவ்வொரு கண் சிமிட்டலும்
ஓர் கவிதை வரியை
என்னுள் விதைத்துச் சென்றது.

விதைத்ததைப் பின்னர் வளர்க்கலாமென்று
நீ பிரிப்பதைப் பார்க்கலானேன்.

பிரித்த பின்னும் ஓரிரு நொடிகள்
புரியாமல் எனைப் பார்த்தாய்.
புரிந்த பின் மண் பார்த்தாய்.

உன் கையிலுள்ள பொருள் காட்டி
மெதுவாக உன் காதுகளில் சொன்னேன்
'இது தான் என் கவிதைப் புத்தகம்.
இதிலிருந்து சுட்டவையே
என் அனைத்துக் கவிதைகளும்'.

வெட்கம் கொஞ்சம் வீசிவிட்டு
உனக்கேதும் அதில் கவிதை தெரிகிறதா என்பதுபோல்
மீண்டும் பார்த்தாய்
நான் தந்த முகம் பார்க்கும் கண்ணாடியை!

Sunday, May 17, 2009

பரிகாசப் புன்னகை

எங்களூர் மேகமெலாம்
வருடத்தில் ஓரிரு முறை தான்
வியர்வை வழிய உழைக்கும்.
மீதி நாட்களில்
எங்கள் வியர்வை வழிவதை
மேல் நின்று பார்த்துப்
பரிகாசப் புன்னகை செய்யும்!

Thursday, May 7, 2009

முற்றும்.

நீ தந்து விட்டுப் போன

திருமண பத்திரிகையின்

அதிர்ச்சியில் இருந்து

சற்று மீட்சி பெற

வார இதழ்களைப் புரட்டினேன்.

எல்லா தொடர்கதைகளிலும்

'முற்றும்' கண்டேன்.

பிரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டு
இரண்டு திங்கள் ஆகவில்லை.
கட்டிய மாவிலை தோரணம் கூட
முழுதாய் உதிரவில்லை.
அதற்குள் பிரிந்துணர்வு ஒப்பந்தம் வேண்டி
நீதி மன்றம் சென்றதேன்?

Friday, May 1, 2009

கண்ணாடி

உன்னைப் பின்னமர்த்தி
என் இருசக்கர வாகனத்தில் செல்கையில்,
ஒரு பக்க கண்ணாடி பின்வரும்
வண்டிகள் நோக்கியும்
மற்றொரு கண்ணாடி பின் சாய்ந்து வரும்
உன்னை நோக்கியும் வைத்திருப்பேன்.
அப்போது மட்டும்
கண்ணாடியில் பொறிக்க பட்ட வாசகம்
மிகவும் அர்த்தப்படுவதாய்த் தோன்றும்!
'Objects in the mirror are closer than they appear'.

[காட்சிக் கவிதையாய் இதைக் காண்பித்த 'பொய் சொல்லப் போறோம்' படப்பாடலுக்கு நன்றி]